கரூரில் ஹெல்மெட்டோடு பயணித்த 400 பேர்! - சாலை பாதுகாப்பு விழிப்பு உணர்வுக்காகப் பயணம் | 400 people traveled with helmet in Karur for Road Safety Awareness

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (04/02/2019)

கடைசி தொடர்பு:21:20 (04/02/2019)

கரூரில் ஹெல்மெட்டோடு பயணித்த 400 பேர்! - சாலை பாதுகாப்பு விழிப்பு உணர்வுக்காகப் பயணம்

ஹெல்மெட்டோடு பயணிக்கும் கலெக்டர்,எஸ்.பி...       

 `தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை வாகன ஓட்டிகள் அனைவரும் உணர வேண்டும்' என்று விழிப்பு உணர்வு வாகனப்பயணத்தைத் தொடங்கி வைத்த கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அறிவுறுத்தினார்.

கரூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் 30-வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று (04.02.2019) நடைபெற்ற விழிப்பு உணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன், மாவட்டக் காவல் கண்கானிப்பாளர் ராஜசேகரன் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதோடு, இருவரும் இரண்டு சக்கர வாகனத்தை தலைக்கவசம் அணிந்து வாகனத்தை ஓட்டி விழிப்பு உணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ``விபத்தில்லாப் பயணத்தை மேற்கொள்ளவும், சாலை விதிகள் குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் நடைபெறும் சாலை பாதுகாப்பு வார விழா இன்று (04.02.2019) தொடங்கப்பட்டு ஒருவார காலம் கடைப்பிடிக்கப்படவுள்ளது. முதல்நாளான இன்று தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவது குறித்தும், இரண்டாம் நாளான நாளை (05.02.2019) அதிவேகமாக வானத்தை இயக்குதல் மற்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது.

ஹெல்மெட்டோடு பயணிக்கும் கலெக்டர்,எஸ்.பி..

அதைத்தொடர்ந்து, மூன்றாம் நாளான 06.02.2019 அன்று சாலை பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து, கல்லூரி மாணவர்களிடையே விளக்கும் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியும், 07.02.2019 அன்று வாகனங்களில் ஒளிரும் பிரதிபலிப்பான் பட்டைகள் மற்றும் இதர பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சியும், 08.02.2019 நான்கு வழி மற்றும் ஆறுவழிச் சாலைகளில் எதிர்திசையில் விதிகளை மீறி செல்வதால் ஏற்படும் தீமை குறித்தும், போக்குவரத்தின்போது சிக்னலில் காட்டப்படும் விளக்குகளின் விளக்கங்கள் குறித்தும் எடுத்துரைக்கும் வகையிலான விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளும், அவசர ஊர்தி செயல்பாடுகள் குறித்தும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. 09.02.2019 அன்று ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனங்களுக்குத் தகுதிச் சான்றுகள் வழங்கப்படவுள்ளன.

மாசில்லாப் பயணம் குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. 10.02.2019 அன்று நிறைவுநாள் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விழிப்பு உணர்வு நிகழ்ச்சியாக நடத்தப்பட இருக்கிறார்கள். இன்று தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டுவது தொடர்பாக விழிப்பு உணர்வுப் பேரணி மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து நகரின் முக்கிய வீதி வழியாகச் சென்று கரூர் பேருந்து நிலையத்தில் முடிவுறுகிறது. தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது விபத்தின்போது அதிக பாதிப்பில்லாமல் உயிரைக் காத்திட உதவும். இதை எப்போதும் பயணத்தின்போது கடைப்பிடிப்பது பாதுகாப்பான ஒன்றாகும். தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற வாசகத்தை வாகன ஓட்டிகள் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, அனைத்து இரண்டு சக்கர வாகன ஓட்டிகளும் கண்டிப்பாகத் தலைக்கவசம் அணிந்தும் நான்கு சக்கர ஓட்டிகள் சீட் பெல்ட் அணிந்து விபத்தில்லாப் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார். 

முன்னதாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் கண்காட்சி பேருந்தை மாவட்ட ஆட்சியர் திறந்துவைத்து பார்வையிட்டார். இந்நிகழச்சியில், காவல்துறையினர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்கள், ஊர்க்காவல் படை, ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள், வாகன  விற்பனையாளர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த 400-க்கும் மேற்பட்டோர் இந்த விழிப்பு உணர்வுப் பேரணியில் கலந்துகொண்டு தலைக்கவசம் அணிந்து வாகங்களை ஓட்டினர்.