`மிருகங்களின் இடத்தை ஆக்கிரமிப்பது பேராசையின் உச்சகட்டம்!’ - சின்னத்தம்பி விவகாரத்தில் கமல் | Kamalhaasn on Chinnathambi elephant issue

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (04/02/2019)

கடைசி தொடர்பு:22:00 (04/02/2019)

`மிருகங்களின் இடத்தை ஆக்கிரமிப்பது பேராசையின் உச்சகட்டம்!’ - சின்னத்தம்பி விவகாரத்தில் கமல்

`மிருகங்களின் இடத்தை மனிதர்கள் ஆக்கிரமிப்பது பேராசையின் உச்சகட்டம்’ என்று சின்னத்தம்பி யானை விஷயத்தில் கமல்ஹாசன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

கமல்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன், ``மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டுள்ளதைப்போல, தமிழகத்திலும் நடைபெற்றிருக்க வேண்டும். அவ்வளவு பெரிய அழுத்தம் மேலிருந்து வந்தால் எந்த சுயமரியாதை உள்ள அரசும் ஏற்காது. அதனுடைய பிரதிபலிப்பாக இருக்கலாம். இதன் முழு அரசியல், தமிழர்களுக்கு விளக்க வேண்டியதில்லை.

மீண்டும், வாக்குச்சீட்டு முறை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்துள்ளன. நவீனத்தை ஏளனம் செய்யக் கூடாது. அதே சமயம் ஓட்டை உள்ள பக்கெட்டில் தண்ணீர் அள்ள முடியாது. பக்கெட்டில் ஓட்டை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சின்னத்தம்பி விஷயத்தைப் பொறுத்தவரை, நாம் மிருகங்களின் இடத்தை ஆக்கிரமிப்போம் என்பது பேராசையின் உச்சகட்டம். இந்த உலகம் நமக்கும் வாழ்வதற்கு இடம் அளித்துள்ளது. நமக்காக மட்டும்தான் உலகம் என்பது தவறு. அதற்கான விளைவுகளை அனுபவித்துதான் ஆக வேண்டும்.

சின்னத்தம்பி யானை

சின்னத்தம்பியை கும்கி ஆக்குவது குறித்து வனத்துறை அமைச்சர் ஒரு கருத்து, நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு கருத்து என்று மாறுபட்ட கருத்துகளைக் கூறியுள்ளனர். இது தமிழக அரசின் தனி குணாதிசயம். பல வருடங்களாக இதைப் பார்த்து வருகிறோம். இரு நாக்கு உடையவர்கள். பேரிடரின்போது வராமல், பிரதமர் தமிழகத்துக்கு தற்போது அடிக்கடி வருவதற்குக் காரணம் தேர்தல்தான்; மக்கள் அல்ல. பிரதான கட்சிகளில் இருந்து கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அதைப்பற்றி விவாதிக்க முடியாது’’ என்றார்