தாய் வீட்டில் இருந்து திரும்பாததால் ஆத்திரம் - மனைவியைக் கொடூரமாக குத்திக்கொன்ற கணவன்! | husband killed his wife brutally in pudukottai

வெளியிடப்பட்ட நேரம்: 01:52 (05/02/2019)

கடைசி தொடர்பு:07:25 (05/02/2019)

தாய் வீட்டில் இருந்து திரும்பாததால் ஆத்திரம் - மனைவியைக் கொடூரமாக குத்திக்கொன்ற கணவன்!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து அங்கு பணிபுரிந்த தன் மனைவியைக் கத்தியால் குத்தி, கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி லதா (28). வேலுச்சாமி-லதா தம்பதிக்கு இரு குழந்தைகள். கணவன் மனைவிக்கு இடையே குடும்பத்தில் அடிக்கடி  சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், லதா கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்குச் செல்வதும், பிறகு சிறிது நாள்களில் வீட்டுக்கு வந்துவிடுவது வழக்கம். இந்த நிலையில்தான் கடந்த சில நாள்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், தன் இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, கொண்ணகட்டுபட்டியில் உள்ள தன் தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். நீண்ட நாள்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் தான், இரு பிள்ளைகளையும் காப்பாற்றுவதற்காக, லதா விராலிமலை பேருந்து நிலையத்தில் உள்ள அலங்காரப் பொருள்கள் கடையில் வேலைக்குச் சேர்ந்து அங்கு பணிபுரிந்து வந்தார்.

கடையில், பணிபுரிந்து வந்த லதாவை, வேலுச்சாமி சந்திக்கச் சென்றார். அப்போது லதாவுடன் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றியதில், வேலுச்சாமி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லதாவை சரமாரியாக குத்தினார். இதனால், சரிந்து கீழே விழுந்த லதா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர், விராலிமலை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். 

சிறிது காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வேலுச்சாமியை தாக்க விறகுக் கட்டைகளுடன் லதாவின் உறவினர்கள் மருத்துவமனைக்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். வேலுச்சாமியை இலுப்பூர் காவல்நிலையத்துக்கு போலீஸார் கொண்டு சென்றனர். தாய் இறந்த செய்தி குறித்து அறிந்த இரண்டு குழந்தைகளும் கண்ணீர் மல்க அழுத காட்சி காண்போரைக் கலங்க வைத்தது. குடும்பத் தகராற்றில் மனைவியைக் கணவன் வெட்டிக்கொன்ற சம்பவம் விராலிமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.