மறு கிராம சபை கூட்டத்தைக் கூட்டுங்கள்... - ஆட்சியரிடம் புதுக்கோட்டை மக்கள் மனு! | pudukkottai village people urges to re conduct the grama sabha meeting

வெளியிடப்பட்ட நேரம்: 02:42 (05/02/2019)

கடைசி தொடர்பு:07:28 (05/02/2019)

மறு கிராம சபை கூட்டத்தைக் கூட்டுங்கள்... - ஆட்சியரிடம் புதுக்கோட்டை மக்கள் மனு!

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை விடுதி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. எனவே, மறு கூட்டத்தைக் கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஊர் மக்கள் ஆட்சித்தலைவரிடம் மனு கொடுத்தனர்.

 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, `புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம், புதுக்கோட்டை விடுதி கிராமத்தில், கடந்த ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் குறைவென் வரம்பு பின்பற்றப்படவில்லை. 6,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சி என்பதால், குறைந்தபட்சம் 200 பேர் வரையிலாவது மக்கள் கலந்துகொண்டு இருக்க வேண்டும். ஆனால், 30-க்கும் குறைவான மக்களே கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டம் குறித்து, பொதுமக்களுக்கு எந்தவித அறிவிப்பும் விடுக்கவில்லை. காலை 11 மணிக்கு துவங்கிய கூட்டம் 11.30 மணிக்கு முடித்துக் கொள்ளப்பட்டது. கூட்டத்துக்குத் தனி அலுவலர் தலைமை என்றும் முன்னிலை இடம் காலியாகவும் தீர்மானத்தில் விடப்பட்டிருந்தது. அதிகாரிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் மக்கள் 49 பேரிடம் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது. அதிலும், ஒருவர் இரு முறை கையெழுத்திடக் கூறி முறைகேடு நடைபெற்றுள்ளது.

முந்தைய ஆண்டுக்கான ஆண்டறிக்கை சரிபார்த்து பொதுமக்கள் மத்தியில் வாசிக்கப்படவில்லை. வரவு, செலவு கணக்குகள் குறித்த விவரங்களை ஊராட்சி செயலாளரிடம் கேட்டபோது முழுமையான விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. எனவே, அரசாணை ஏதும் பின்பற்றப்படாமல் நடந்த இந்தக் கூட்டத்தைச் செல்லுபடியாகாத கூட்டமாக அறிவித்து மறு கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும். அந்தக் கூட்டம் குறித்து ஒருவாரத்துக்கு முன்பாகவே மக்களுக்குத் துண்டுப் பிரசுரங்கள், ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்" இவ்வாறு அதில் தெரிவித்திருந்தனர்.