`பா.ஜ.க-வையும், மம்தாவையும் தோற்கடிப்பதே இலக்கு' - ஜி.ராமகிருஷ்ணன் காட்டம்! | G.Ramakrishnan slams mamata protest

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (05/02/2019)

கடைசி தொடர்பு:07:38 (05/02/2019)

`பா.ஜ.க-வையும், மம்தாவையும் தோற்கடிப்பதே இலக்கு' - ஜி.ராமகிருஷ்ணன் காட்டம்!

மிகப்பெரிய வன்முறையை அரங்கேற்றிய மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் ஜனநாயகம் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. பா.ஜ.கவையும் மம்தாவையும் தோற்கடிப்பதே மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கம் என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஜி ராமகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட் ஒரு தேர்தல் அறிக்கையாகவே உள்ளது. சரியான புள்ளி விவரங்களை வெளியிடாமல் தவறான தகவல்களை பட்ஜெட்டில் வெளியிட்டுள்ளனர். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. அறிக்கையை வெளியிடாமல் மத்திய அரசு தடுத்ததால் தேசிய புள்ளி விவர கமிஷன் தலைவர் உட்பட 2 பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் எனப் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை அளித்தது. ஆனால், தற்போது வேலையில் இருப்பவர்களுக்கே வேலை இல்லாத நிலை உள்ளது. மத்திய பட்ஜெட்டில் பள்ளி கல்விக்கு நிதி ஒதுக்காததால் கல்வித் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. 9 அம்ச கோரிக்கைப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையைத் தமிழக அரசு கைவிட வேண்டும்.

ராமகிருஷ்ணன்

மிகப்பெரிய வன்முறையை அரங்கேற்றிய மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் ஜனநாயகம் பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது. பா.ஜ.க-வையும் மம்தாவையும் தோற்கடிப்பதே மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கம். சி.பி.ஐ. அமைப்பைப் பல மாநிலங்களில் தங்களது அரசியல் ஆதாயத்துக்காக மத்திய அரசு பயன்படுத்துகிறது.
தமிழகத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது, ஆனால் வழக்கு பதிவு செய்யவில்லை. அதேபோல் இந்த விவகாரத்திலும் இருந்துவிடக் கூடாது. மத்திய அரசு பல்வேறு வரி விதிப்புகளில் மாநில அரசுக்கான பங்கு குறைக்கப்படுவதால் மாநில உரிமை பறிக்கப்படுகிறது" என்றார்.