``அரசியல் சாசனத்தை அதிகாரத்தில் இருப்பவர்களும் மதிக்க வேண்டும்!” -அற்புதம்மாள் | bureaucrats should obey the constitution too, says arputham ammal

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (05/02/2019)

கடைசி தொடர்பு:12:15 (05/02/2019)

``அரசியல் சாசனத்தை அதிகாரத்தில் இருப்பவர்களும் மதிக்க வேண்டும்!” -அற்புதம்மாள்

அற்புதம்மாள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் மௌனமாக இருப்பதை அடுத்து ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி  பேரறிவாளனின்  தாயார் அற்புதம்மாள் தமிழகம் முழுக்கச் மக்களைச் சந்தித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று (4.2.19) விருதுநகரில் நடந்த சந்திப்புக் கூட்டத்தில் பேசிய அற்புதம்மாள், ``பேரறிவாளன் உட்பட ஏழு பேரை  விடுதலை செய்யக்கோரி கடிதப்போராட்டம், பட்டினிப்போரட்டம், மிதிவண்டி பேரணி என பலகட்ட போராட்டத்துக்குப் பிறகும் அவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை” என்று கூறினார். 

அற்புதம்மாள்

மேலும், ``தமிழக ஆளுநர் 161 விதியின் கீழ் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் சிறைத்தண்டனையின் நோக்கம் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வே தவிர வஞ்சகம் அல்ல. நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், ஐந்து மாதங்கள் ஆகியும் ஆளுநர் டேபிளுக்குச் சென்ற இது தொடர்பான கோப்புகள் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பிலேயே இருக்கின்றன. சாமானியர் ஆகிய பொதுமக்கள் சட்டத்தையும், நீதிமன்ற உத்தரவையும் மதிக்கவில்லை என்றால் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஆனால், அதிகாரத்தில் உள்ளவர்கள் இதில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர். நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம் அரசியல் சாசன அமர்வை அதிகாரத்தில் உள்ளவர்களும் மதிக்கவேண்டும்” என்றார். அற்புதம்மாளின் அடுத்த மக்கள் சந்திப்பு தேனி மாவட்டம், இண்டர்நேஷனல் ஹோட்டலில் நாளை (6-2-2019) நடைபெற இருக்கிறது.