பலவிதப் போட்டிகள், பரிசுகள் ரூ.45 லட்சம்!- செந்தில்பாலாஜி பாணியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் | Minister M.R vijayabaskar taking steps to hold the voters in karur district

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (05/02/2019)

கடைசி தொடர்பு:13:50 (05/02/2019)

பலவிதப் போட்டிகள், பரிசுகள் ரூ.45 லட்சம்!- செந்தில்பாலாஜி பாணியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் பெளக்ஸ்

``தி.மு.கவுக்கு தாவிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பின்னே இளைஞர்கள் போய்விடக்கூடாது என்பதற்காக செந்தில்பாலாஜி பாணியிலேயே இதுவரை 45 லட்சம் செலவு செய்திருக்கிறார் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்" என்கிறார்கள் கரூர்வாசிகள்.

செந்தில்பாலாஜி

அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும், கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. டி.டி.வி.தினகரனோடு ஏற்பட்ட பல்வேறு பிணக்குகள் காரணமாக, கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி தி.மு.க-வில் ஐக்கியமானார். அதே மாதம் 27-ம் தேதி ஸ்டாலினை கரூருக்கு அழைத்து வந்து, 30,425 பேரை தி.மு.க-வில் இணைத்து, ஸ்டாலினை திக்குமுக்காட வைத்தார். அதோடு, ஸ்டாலினை அழைத்து வந்து, கரூரில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கான பூத் ஏஜெண்ட்கள் கூட்டத்தை நேர்த்தியாக நடத்தி, ஸ்டாலினை மிரள வைத்தார். அதன் விளைவாக, அவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியை ஸ்டாலின் வழங்கி இருக்கிறார்.

தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தை இதுவரை யாரும் நடத்தாத அளவுக்கு பிரமாண்டமாக நடத்தி, சிறப்பு விருந்தினராக வந்த ஆர்.எஸ்.பாரதியை ஆச்சர்யப்பட வைத்தார். அதோடு, ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் செந்தில்பாலாஜியை சுற்றி 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பம்பரமாக சுழன்று வேலை பார்த்தனர். 2011-2016-ம் ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் இவர் அமைச்சராக இருந்தபோது, கரூர் முழுக்க இளைஞர்களுக்கு கிரிக்கெட், கபடி, மாரத்தான் மற்றும் ரேக்ளா ரேஸ் என்று பிரமாண்டமாக போட்டிகள் வைத்து, லட்சங்களில் பரிசுகளை வழங்குவார். இதனால், செந்தில்பாலாஜி பின்னே எப்போதும் ஒரு இளைஞர் பட்டாளம் இருக்கும்.

கிரிக்கெட் விளையாடும் எம்ஆர்விஜயபாஸ்கர்

​​​​​இந்நிலையில், ``கரூர் இளைஞர்களை கவர்வதற்காக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், செந்தில்பாலாஜி பாணியை காப்பியடித்து, மாவட்டம் முழுக்க கிரிக்கெட், கபடி, மாரத்தான், ரேக்ளா ரேஸ் மற்றும் நாளை இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் என்று ஏக அதகளம் பண்ண ஆரம்பிச்சிருக்கார். முன்னாள் அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்த போட்டிகளை நடத்துகிறார்.

கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கடந்த சில நாள்களாக மாவட்டம் முழுக்க இதுதான் பரபரப்பு. மாவட்டம் முழுக்க உள்ள எல்லா ஒன்றியங்களில் இந்தப் போட்டிகளை நடத்துகிறார். இதில், கிரிக்கெட் மற்றும் கபடி போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசாக மட்டும் அமைச்சர் ரூ.45 லட்சம் வழங்கி இருக்கிறார். அதை அவரது தரப்பு போஸ்டராகவும் அடித்து மாவட்டம் முழுக்க ஒட்டி இருக்கிறது. இதற்கு முன்பு அமைச்சர் இப்படி நடத்தியதில்லை. இப்போ நடத்துவதற்கு காரணம், செந்தில்பாலாஜி மீதுள்ள பயம்தான். அசுரத்தனமாக அடுத்தடுத்து பிரமாண்ட நிகழ்ச்சிகளை நடத்தி, தி.மு.க-வினரை மட்டுமல்ல, மொத்த கரூரையும் கவர்ந்து வருகிறார். குறிப்பாக, நாளுக்கு நாள் அவர் பின்னே இளைஞர்கள் கூட்டம் சேர்ந்து வருகிறது. அதைத் தடுத்து, கரூர் மாவட்ட இளைஞர்களை அ.தி.மு.க-வில் தக்க வைக்கதான், செந்தில்பாலாஜி பாணியிலேயே இந்தப் பிரமாண்ட விளையாட்டுப் போட்டிகளை நடத்த தொடங்கி இருக்கிறார்" என்கிறார்கள் கரூர் மாவட்ட அரசியல் பார்வையாளர்கள் சிலர்.

கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்...

இதுசம்பந்தமாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் பேசினோம். ``அண்ணன் வழக்கமாக வருடாவருடம் இப்படி பிரமாண்டமாக விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது வழக்கம். யாரை பார்த்தும் காப்பியடித்து இப்படி நடத்தவில்லை. உண்மையில் அ.தி.மு.க-வில்தான் அபரிதமாக இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களின் நலனுக்காகவும், அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்காகவும் விளையாட்டுப் போட்டிகள், வேலைவாய்ப்பு முகாம்களை அமைச்சர் நடத்துறார். 'நம் பக்கம் இளைஞர்கள் இல்லையே' என்ற பயத்திலும், பதற்றத்திலும் செந்தில்பாலாஜி தரப்பு கட்டுக்கதைகளை இட்டுக்கட்டுகிறது" என்றார்கள்.