தலைமைச் செயலகத்தில் துப்புரவுப் பணி!- விண்ணப்பித்த பி.இ, எம்.பி.ஏ, எம்.டெக் பட்டதாரிகள் | graduates applied for sweeper post in assembly

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (05/02/2019)

கடைசி தொடர்பு:13:15 (05/02/2019)

தலைமைச் செயலகத்தில் துப்புரவுப் பணி!- விண்ணப்பித்த பி.இ, எம்.பி.ஏ, எம்.டெக் பட்டதாரிகள்

இந்தியாவில், 2017-18-ம் ஆண்டில், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ளதாகத் தேசிய மாதிரி ஆய்வு  அலுவலகம் சமீபத்தில் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது. இதை நிரூபிக்கும் விதமாக தமிழகத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

தலைமை செயலகம்

தலைமைச் செயலகத்தில் துப்புரவுப் பணியாளருக்கு 14 இடங்கள் காலியாக உள்ளதாகவும் அந்தப் பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனச் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது. 

அந்தக் காலியிடங்களுக்கு இதுவரை நான்காயிரத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் அதிகமாக பி.இ, எம்.பி.ஏ, பி.காம், எம்.டெக், எம்.பில் படித்த  பட்டதாரிகளே விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர டிப்ளமோ, ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.

பட்டதாரி

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகவுள்ளது. அதனால் படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை என்றாலும் கிடைத்த வேலையைச் செய்யலாம் என்ற நோக்கத்தில் சில பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.  மேலும், தலைமைச் செயலக துப்புரவுப் பணியாளருக்கு 17,000 வரை சம்பளம் மற்றும் அரசின் சில சலுகைகள் கிடைக்கும் என்பதாலும் சிலர் இந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.