குடியாத்தத்தில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை! - கொள்ளையடிக்க வந்ததாக நினைத்து விபரீதம் | Man beaten to death in Gudiyatham

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (05/02/2019)

கடைசி தொடர்பு:15:15 (05/02/2019)

குடியாத்தத்தில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை! - கொள்ளையடிக்க வந்ததாக நினைத்து விபரீதம்

குடியாத்தம் அருகே நள்ளிரவில் சுற்றித்திரிந்த வடமாநில நபரை, ‘கொள்ளையன்’ எனச் சந்தேகித்த சிலர், அவரைக் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளனர். உடலை, அங்குள்ள ஒரு கிணற்றில் வீசிவிட்டுத் தப்பிச்சென்ற நபர்கள் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கொல்லப்பட்ட வடமாநில நபர்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கொசவன்புதூர் காளியம்மன் கோயில் தெருவில் நேற்று நள்ளிரவு, அடையாளம் தெரியாத வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் சுற்றித்திரிந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சிலர், இவர்களை ‘கொள்ளையர்கள்’ என்று சந்தேகித்து துரத்திப் பிடிக்க முயன்றுள்ளனர். வடமாநில கும்பலும், தப்பி ஓடியதால் சந்தேகம் வலுத்துள்ளது. மூன்று பேரில், ஒருவர் சிக்கியுள்ளார். அவரை, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில், பிடிபட்ட வடமாநில நபர் இறந்துவிட்டார். கொலையை மறைப்பதற்காக, அங்குள்ள தண்ணீரில்லாத 20 அடி ஆழமுள்ள கிணற்றில் உடலை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கொல்லப்பட்ட வடமாநில நபர்

இதையறிந்த கே.வி.குப்பம் போலீஸார், சம்பவ இடத்துக்கு இன்று காலை விரைந்து சென்று கிணற்றில் கிடந்த உடலை மீட்டனர். அவரின் பாக்கெட்டில் லைசென்ஸ் இருந்தது. அதில், ``அஸாம் மாநிலம் சேரேகபர் சிவசாகர் லஹிமி நகரைச் சேர்ந்த கன்ஜன் கர்பாலியா (45) என்பது தெரியவந்தது. இந்த முகவரியை வைத்து, கொல்லப்பட்டவரின் உறவினர்களைத் தொடர்புகொள்ள போலீஸார் முயன்று வருகிறார்கள். உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், வழக்கு பதிவு செய்து, வடமாநில நபரைக் கொடூரமாக அடித்துக் கொன்ற நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.