''சல்லிக்காசுகூட எடுக்காமல் திருப்பி அளித்துவிட்டோம்!'' - இறந்த நாமக்கல் அர்ச்சகரின் சகோதரர் | We refunded money to people who donated, says deceased Namakkal priest's family

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (05/02/2019)

கடைசி தொடர்பு:17:00 (05/02/2019)

''சல்லிக்காசுகூட எடுக்காமல் திருப்பி அளித்துவிட்டோம்!'' - இறந்த நாமக்கல் அர்ச்சகரின் சகோதரர்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், பூஜை செய்யும்போது தவறுதலாக கீழே விழுந்து இறந்த அர்ச்சகர் வெங்கடேசனின் குடும்பத்துக்கு நன்கொடையாக ரூ.17 லட்சம் கிடைத்தது. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வெங்கடேசன், தன் சகோதரர் நாகராஜனுக்கு உதவியாக இந்த கோயிலுக்கு வந்து அர்ச்சகர் பணியில் ஈடுபட்டபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. 

நாமக்கல் அர்ச்சகர் பலி

அர்ச்சகர் வெங்கடேசன் மரணமடைந்ததைத் தொடர்ந்து, ஃபேஸ்புக்கில் போலி கணக்கை தொடங்கி வெங்கடேசனின் மற்றொரு சகோதரரான கிருஷ்ணமூர்த்தியின் கரூர் வைஷ்யா வங்கிக் கணக்கை கொடுத்து, அர்ச்சகர் குடும்பத்துக்கு உதவிபுரியுமாறு பதிவு வெளியிட்டுள்ளனர்.  கிட்டத்தட்ட ரூ.17 லட்ச ரூபாய் நிதியாகத் திரண்டது. ஆனால், வெங்கடேசனின் குடும்பத்தினர்  யாருமே உதவி கோரவில்லை. இது தொடர்பாக வெங்கடேசனின் குடும்பத்தினர், நாமக்கல் கரூர் வைஷ்யா வங்கியில் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து, கிருஷ்ணமூர்த்தியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. இது தொடர்பாக, விகடன் செய்தி வெளியிட்டிருந்தது. 

இந்நிலையில், போனில் இன்று நம்மைத் தொடர்புகொண்ட இறந்துபோன வெங்கடேசனின் சகோதரர் நாகராஜன் கூறுகையில், ''நாங்கள் யாரிடமும் எந்த உதவியையும் எதிர்பார்க்கவில்லை. கோயில் நிர்வாகத்திடம் என் சகோதரர் கிருஷ்ணமூர்த்தியின் வங்கிக் கணக்கை கொடுத்திருந்தோம். ஃபேஸ்புக்கில் யார் பதிவிட்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. என் சகோதரருக்காக பணம் நன்கொடையாகக் கிடைத்ததை  அறிந்ததும், உடனடியாக வங்கியில் கிருஷ்ணமூர்த்தியின் வங்கிக் கணக்கை முடக்கச் சொல்லிவிட்டோம். அதோடு, பணம் அனுப்பியவர்களுக்கு அந்தத் தொகையை உடனடியாகத் திருப்பி அனுப்புமாறு எழுத்துபூர்வமாக வேண்டுகோள் விடுத்தோம். தற்போது,  கிருஷ்ணமூர்த்தியின் வங்கிக் கணக்கில்  பணம் அனுப்பிய 200- க்கும் மேற்பட்டவர்களின் தொகை திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டது. அடுத்தவர்களின் பணத்துக்கு ஆசைப்பட்டவர்கள் நாங்கள் இல்லை. யாரையும் ஏமாற்றும் எண்ணமும் எங்களுக்கு இல்லை'' என்று தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க