`சார், இந்த அட்ரஸ் எங்கு இருக்கிறது?'- துணை நடிகருக்கு நேர்ந்த பரிதாபம்  | Mob tried to kill Poonamallee mechanic with deadly weapons

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (05/02/2019)

கடைசி தொடர்பு:16:45 (05/02/2019)

`சார், இந்த அட்ரஸ் எங்கு இருக்கிறது?'- துணை நடிகருக்கு நேர்ந்த பரிதாபம் 

துணை நடிகருக்கு அரிவாள் வெட்டு

சென்னைப் பூந்தமல்லி காட்டுப்பாக்கம் மெயின் சாலையில் முகவரி கேட்பது போல வந்த மூன்று பேர் மெக்கானிக் ஒருவரை வெட்டியுள்ளனர். அதைத் தட்டிக்கேட்ட துணை நடிகருக்கும் வெட்டு விழுந்தது. 

சென்னைப் பூந்தமல்லி காட்டுப்பாக்கம் மெயின் சாலை எப்போதும் பரபரப்பாகக் காணப்படும். இந்தச் சாலையில் மூன்று பேர் பைக்கில் வந்தனர். அவர்கள் அந்தப் பகுதியில் உள்ள மெக்கானிக் பெருமாளிடம், `சார், இந்த அட்ரஸ் எங்கு இருக்கு' என்று விவரம் கேட்டுள்ளனர். அதற்கு பெருமாள் பதில் சொல்லிக்கொண்டிருந்த சமயத்தில் பைக்கில் வந்தவர்கள் பெருமாளிடம் தகராறு செய்துள்ளனர். கண் இமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளால் பெருமாளை அவர்கள் வெட்டத் தொடங்கினர். இதில் தலை, கைகளில் அவருக்கு சரமாரியாக வெட்டு விழுந்தது. அவர்களிடமிருந்து தப்பிக்க பெருமாள் ஓடத் தொடங்கினார். 

இந்தச் சமயத்தில் துணை நடிகர் சண்முகம் என்பவர் அவ்வழியாக வந்தார். பெருமாளை அரிவாளால் வெட்ட விரட்டியதைப் பார்த்த சண்முகம் அதைத் தடுக்க முயன்றார். அதோடு அரிவாளால் வெட்டியவர்களைத் தட்டிக் கேட்டார். அப்போது சண்முகத்துக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் சண்முகத்தையும் அரிவாளால் வெட்டினர். அவருக்கு தலையில் வெட்டு விழுந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். பூந்தமல்லி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர். பொதுமக்கள் திரண்டதால் மர்மநபர்கள் பைக்கில் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து பூந்தமல்லி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

துணை நடிகருக்கு அரிவாள் வெட்டு

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``எங்களுக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்குச் சென்று உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பெருமாள், சண்முகத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். மெக்கானிக் பெருமாள், காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர். சண்முகம் பம்மலைச் சேர்ந்தவர். இவர், ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸிலும் இருந்துள்ளார். மேலும், சினிமாவில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்துள்ளார். துணை நடிகர் சண்முகத்துக்கு தனியார் மருத்துவமனையிலும் பெருமாளுக்கு அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இவர்களை வெட்டியவர்கள் குறித்து விசாரித்துவருகிறோம். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம். விரைவில் அரிவாளால் வெட்டியவர்களைப் பிடித்துவிடுவோம்" என்றனர்.

பொதுமக்கள் கண் முன்னால் மெயின் சாலையில் நடந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.