“போராட்டத்தில் பங்கேற்றதால் அரசு எங்களைப் பழிவாங்குகிறது!” - ஆசிரியர்கள் | TN government is against us; given transfer orders to the teaches who participated the recent strike !

வெளியிடப்பட்ட நேரம்: 10:32 (06/02/2019)

கடைசி தொடர்பு:10:32 (06/02/2019)

“போராட்டத்தில் பங்கேற்றதால் அரசு எங்களைப் பழிவாங்குகிறது!” - ஆசிரியர்கள்

“போராட்டத்தில் பங்கேற்றதால் அரசு எங்களைப் பழிவாங்குகிறது!” - ஆசிரியர்கள்

ரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், அண்மையில் தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் போராட்டத்தை தி.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஆதரித்தனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, அவர்கள் நடத்திய போராட்டத்திற்குக் கல்லூரிப் பேராசிரியர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கடந்த ஜனவரி 30-ம் தேதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். ஆனால், கடைசி நேரத்தில் பெரும்பாலான தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்வில்லை. 

ஆசிரியர்கள் போராட்டம்

ஜனவரி 22-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், அரசின் உத்தரவாதத்தை ஏற்றும் ஜனவரி 30-ம் தேதி தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்களில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆவர். இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோதே, ஜனவரி 28-ம் தேதிக்குள் அனைவரும் வேலைக்குத் திரும்ப வேண்டும்; வேலைக்குத் திரும்பாதவர்களின் பணியிடங்கள் காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டுத் தொகுப்பு ஊதியம் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அரசுத் தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் போராட்டம் முடிந்து வேலைக்குத் திரும்பிய மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை, அவர்கள் ஏற்கெனவே பணியாற்றிய ஊர்களில் பணிபுரிய விடாமல், பணியிட மாற்றம் செய்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோல் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் பணியிட மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஆசிரியர்கள், ``மாணவர்களின் நலன்கள் மற்றும் அரசின் கோரிக்கைகளை ஏற்றுதான் நாங்கள் போராட்டத்தைக் கைவிட்டுப் பணிக்குத் திரும்பினோம். இந்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள் உறுதியாகப் பங்கேற்றதால் ஆசிரியர்கள் மீது அரசு பழி வாங்கும் நோக்கோடு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில இடங்களில் பணியில் சேர்வதற்காகச் சென்ற ஆசிரியர்களை பணியில் சேரவிடாமல் அலைக்கழிக்க வைக்கின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

எங்களுடைய போராட்டங்களை ஏற்கெனவே பலமுறை அரசின் வலியுறுத்தலை ஏற்று வாபஸ் பெற்றுள்ளோம். ஆனால், இதுவரை அரசு எங்களுடைய எந்தக் கோரிக்கைக்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஒவ்வொரு முறை போராட்டத்தில் நாங்கள் ஈடுபடும் போதும், புதிதாகப் போராட்டத்தில் ஈடுபடுவதுபோன்று ஒவ்வொரு முறையும் எங்களின் கோரிக்கைகள் என்ன என்றும், அவை நிறைவேற்றப்படும் என்றும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்படும். நாங்கள் போராட்டங்களை வாபஸ் பெற்றபோதே, எங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தோம். ஆனால், அதை மீறி இப்போது அரசு உள்நோக்கத்தோடு செயல்படுகிறது” என்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த மோசஸ் பேசுகையில், ``அரசுத் தரப்பில் ஜனவரி 30-ம் தேதிக்குள் அனைவரும் வேலைக்குத் திரும்ப வேண்டும் எனக் கூறப்பட்டது. ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பாக ஜனவரி 30-ம் தேதி மாணவர்களின் நலன் கருதி நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று, 31-ம் தேதி பணிக்குத் திரும்பினோம். பெருவாரியான ஆசிரியர்கள் வேலைக்குத் திரும்பிய நிலையில் அரசு விதித்த காலக்கெடுவுக்குள் வேலைக்குத் திரும்ப இயலாத 3000 ஆசிரியர்களுக்கும், போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 2,500 ஆசிரியர்களுக்கும் பணியிட மாற்ற ஆணைகளை வழங்கி உள்ளனர். அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, அந்த ஆணையைப் பெறாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் நாங்கள் முறைப்படி கோரிக்கைகள் வைத்து இருக்கிறோம். ஆனால் சில மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்ற ஆணையை உடனே பெற்றுக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்துகின்றனர்” என்றார்.

போராட்டத்தைக் கைவிட்ட பின்னரும் ஆசியர்களின் வாழ்வு, போராட்டம் நிறைந்ததாகவே திகழ்கிறது!


டிரெண்டிங் @ விகடன்