`அப்பா, என்னை கடுமையா அடிக்கிறாங்க!' - தந்தையைக் கதறவைத்த மாணவனின் தற்கொலை | Perambalur student body recovered from School premises

வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (05/02/2019)

கடைசி தொடர்பு:19:45 (05/02/2019)

`அப்பா, என்னை கடுமையா அடிக்கிறாங்க!' - தந்தையைக் கதறவைத்த மாணவனின் தற்கொலை

பெரம்பலூர் மாவட்டம் தனியார் பள்ளி விடுதியில், ஒரு மாணவன், உடல் முழுவதும் காயங்களுடன் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைப் பெற்றோர்கள் கேள்விப்பட்டதும் பள்ளியை அடித்துநொறுக்கி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தனியார் பள்ளி

அரியலூர் மாவட்டம் கைகாட்டி அருகே, காங்கையர் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த உத்தாண்டம்- தேன்மொழி தம்பதியின் மகன் உதயநிதி. இவர், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ் டூ படித்துவந்தார். பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த உதயநிதி, நேற்று முன்தினம் இரவு, 'என்னைக் கடுமையாக அடிக்கிறாங்கப்பா...' என்று போனில் பேசிவிட்டு அறைக்குச் சென்றிருக்கிறார். சிறிது நேரம் கழித்து, சகமாணவர்கள் அவரது அறைக்குச் சென்றபோது கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, உதயநிதி சடலமாக தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். அதிர்ச்சி அடைந்த சகமாணவர்கள், விடுதி வார்டனிடம் தகவல் சொல்லியிருக்கிறார்கள். பள்ளி நிர்வாகம் குன்னம் போலீஸாரிடம் புகார் அளித்தனர்.

தற்கொலை செய்துக்கொண்ட மாணவர்

போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, உதயநிதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச்செல்ல முயன்றனர். அதற்குள் அங்கு வந்த உதயநிதியின் பெற்றோர், மகனின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். பின்னர், உடலை எடுத்துச் செல்லவிடாமல் தடுத்த பெற்றோர், உறவினர்கள், போலீஸார் மற்றும் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து பள்ளியை அடித்து நொறுக்கினார்கள். பிறகு,சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாணவனின் கையில் காயம்

இதுகுறித்து உதயநிதியின் உறவினர்களிடம் பேசினோம். "எங்கள் பிள்ளை நல்லபடியாதான் அவன் தந்தையிடம் பேனில் பேசிவிட்டு சென்றிருக்கிறான். ஆனால், கொஞ்ச நேரத்தில் தூக்கில் தொங்குகிறான் என்று செய்திவருகிறது. அதுவும் பள்ளி நிர்வாகத்தினர் எங்களிடம் தகவல் எதுவும் சொல்லாமல், போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். காவலர்களும் நாங்கள் வருவதற்கு முன்பே உடலை எடுக்க அவசர அவசரமாக முயற்சி எடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்தக் கோபத்தில்தான் பள்ளியை அடித்துநொறுக்கினோம்.

பெரம்பலூர் காவல்துறை அலுவலகம்

உதயநிதியின் உடம்பு முழுவதும் காயங்கள். பள்ளி நிர்வாகத்தினர் அடித்துக் கொன்றுவிட்டு, அதை மூடிமறைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். இப்பள்ளியில், மாணவர்களைத் தொடர்ந்து டார்சர் கொடுத்துக்கொண்டிருப்பதால், இதுவரை மூன்று பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். எங்கள் பிள்ளைக்கு நடந்ததுபோல வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. இப்பள்ளியின்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மக்களைத் திரட்டி தொடர் போராட்டம் நடத்துவோம்" என்று எச்சரித்தனர்.