`களமிறங்கும் வாரிசுகள்!' - அதிர்ச்சியில் அ.தி.மு.க தொண்டர்கள் | decision by admk leaders to field their heirs makes cadres shock

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (05/02/2019)

கடைசி தொடர்பு:20:30 (05/02/2019)

`களமிறங்கும் வாரிசுகள்!' - அதிர்ச்சியில் அ.தி.மு.க தொண்டர்கள்

 

தேனி ,விருதுநுகர் நாடாளுமன்றத் தொகுதிகளை குறிவைத்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத் ஏற்கெனவே விருப்பமனு பெற்றுள்ள நிலையில், சேலம் தொகுதியில் முதல்வர் எடப்பாடியின் மகன் மிதுன் போட்டியிட விருப்பமனு இன்று பெறப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மிதுன் பெயரில் விருப்பமனுவைப் பெற்றுள்ளனர். அடுத்தடுத்து வாரிசுகள் களமிறங்குவது அ.தி.மு.க.வினரிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

ரவீந்தரநாத் வாரிசுகள்

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த நிர்வாகி ஒருவர், ``தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு இணையாக, பி.ஜே.பி., பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், கொங்கு ஈஸ்வரன், சரத்குமார் என்று மெகா கூட்டணியை அமைக்கும் முயற்சி ஏறத்தாழ முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், கட்சியின் சீனியர்கள் தங்கள் வாரிசுகளை வேட்பாளர்களாக களமிறக்கி வேடிக்கை காட்டத் தொடங்கிவிட்டனர். ரவீந்தரநாத்தைத் தொடர்ந்து, முதல்வரின் மகன் மிதுன் பெயரில் தற்போது விருப்பமனு பெறப்பட்டுள்ளது. 

கடலூரில் தன் மகன் எம்.சி.எஸ்.பிரவீனைக் களமிறக்க அமைச்சர் எம்.சி.சம்பத் விரும்புகிறார். கடந்த ஜனவரி 20ம் தேதி மகன் பிரவீனின் பிறந்தநாளுக்காக, கடலூர் முழுவதையும் போஸ்டரால் நனைத்துவிட்டார். தற்போது தென்சென்னை எம்.பி.யாக உள்ள ஜெயவர்த்தனுக்கு, வடசென்னைத் தொகுதியைப் பெற்றுவிட அமைச்சர் ஜெயக்குமார் துடிக்கிறார். மகன் ராஜ்சத்யனுக்காக திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியைக் குறிவைத்து மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா முட்டி மோதுகிறார். இப்படி வாரிசுகளுக்கே சீட்டுகளை வாரிக் கொடுத்துவிட்டால், உண்மையாக உழைத்த கட்சியினருக்கு எதை கொடுப்பது? தி.மு.க.வின் வாரிசு அரசியலை ஜெயலலிதா தனது இறுதி மூச்சு வரை எதிர்த்தார். ஆனால் இன்று அ.தி.மு.க. வாரிசு அரசியல் ரூட்டில்தான் பயணிக்கிறது." என்று கொந்தளித்தார்.

அ.தி.மு.க. சார்பாக நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட விரும்புபவர்களிடம், விருப்பமனு பெறும் நிகழ்ச்சி நேற்று பிப்ரவரி 4ம் தேதிதான் தொடங்கியது. தொடங்கப்பட்ட இரண்டாவது நாளே முட்டல் மோதல் வெடிக்கத் தொடங்கிவிட்டன. கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்குவதை விட, தங்கள் கட்சிக்குள் வேட்பாளர்களை அறிவிப்பதுதான் அ.தி.மு.க. தலைமைக்குச் சவாலாக இருக்கப் போகிறது.