சிவகாசி கல் குவாரியில் விதி மீறலா? - மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு | Virudhunagar collector conducts inspection in quarry

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (05/02/2019)

கடைசி தொடர்பு:22:00 (05/02/2019)

சிவகாசி கல் குவாரியில் விதி மீறலா? - மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

உயர் நீதிமன்றக் கிளை உத்தரவின்படி, எரிச்சநத்தம் அருகே கல் குவாரியில் விதிமீறல் நடைபெற்றுள்ளதா என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் ஆய்வு நடத்தினார்.

ஆய்வு

விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே உள்ள லட்சுமியாபுரத்தைச் சேர்ந்தவர் ராமர். எரிச்சநத்தம் பகுதியில் இவருக்குச் சொந்தமான கல் குவாரி இயங்கிவருகிறது. 9.1.2014 முதல் 8.4.2019-ம் தேதி வரை குவாரியில் இருந்து கல் வெட்டி எடுத்துக்கொள்ள புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் அனுமதி வாங்கியுள்ளார். ஆனால், இந்தக் குவாரியில் விதிமுறைகளை மீறி கல் எடுக்கப்படுவதாகவும், நீர்வரத்து ஓடை மற்றும் மங்கம்மாள் சாலையை ஆக்கிரமித்து கல் எடுத்து வருவதாகவும் கூறி, தொத்தனேரி கிராமத்தைச் சேர்ந்த ராஜமன்னார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கல் குவாரியை ஆய்வுசெய்து பிப்ரவரி 18-ம் தேதி அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. தற்போது, குவாரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஆய்வு

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம், சிவகாசி வட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் இன்று சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அனுமதியளித்த அளவைவிட கூடுதலாகக் கல் வெட்டி எடுத்திருப்பதாகத் தெரியவந்தது. எனவே, அந்த இடங்களை அளக்க வேண்டும் என நில அளவையருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

ஆய்வு

இதுகுறித்து ராஜமன்னார் கூறும்போது, ``கல் குவாரி அமைக்க ஒரு இடத்தில் அனுமதி வாங்கியுள்ளனர். ஆனால் தற்போது, அனுமதி வாங்காத வேறு இடத்தில் கல் குவாரி அமைத்துள்ளனர். இதனால், ராணி மங்கம்மாள் சாலை முழுவதும் பாதிக்கப்படும். கிராமத்தின் அருகே உள்ள பள்ளிக்கு ஆபத்து ஏற்படும். எனவே, இதை முழுமையாக ஆய்வுசெய்ய வேண்டும் எனத் தெரிவித்தோம். ஆனால், அதிகாரிகள், கல் குவாரியை முறையாகப் பார்வையிடவில்லை'' எனத் தெரிவித்தார்.