குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரிந்த மிளா... வலை விரித்துப் பிடித்த வனத்துறை! | Nellai forest department officials captured sambar deer entered into residential area

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (05/02/2019)

கடைசி தொடர்பு:23:30 (05/02/2019)

குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரிந்த மிளா... வலை விரித்துப் பிடித்த வனத்துறை!

வனப்பகுதியில் இருந்து தப்பிவந்த மிளா ஒன்று, நெல்லை மாநகரப் பகுதியில் சுற்றித்திரிந்த நிலையில், அதற்கு மயக்க ஊசி செலுத்தி வனத்துறை  ஊழியர்கள்  பிடித்து, காட்டுக்குள் கொண்டுபோய் விட்டனர். 

மிளாவைப் பிடித்த வனத்துறை ஊழியர்கள்

நெல்லை மாநகரப் பகுதியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று நுழைந்தது. அது, குடியிருப்புப் பகுதிக்குள் சுற்றி வந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். பின்னர், அந்தச் சிறுத்தையை வனத்துறையினர் பிடித்துச்சென்றனர். மக்கள் நெருக்கம் மிகுந்த குடியிருப்புப் பகுதிக்குள் சிறுத்தை வந்தது எப்படி எனப் பொதுமக்களும் வனத்துறையினரும் விவாதித்துவந்தனர். 

இந்த நிலையில், நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பகுதிகளில், மான் வகையைச் சேர்ந்த மிளா சுற்றித்திரிவதாக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அளித்த இந்தத் தகவலைத் தொடர்ந்து வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டுமே உள்ள அரிய வகை மிளா, நகரப் பகுதிக்குள் சுற்றிவருவதுகுறித்த தகவல் பரவியதால், பொதுமக்களும் தேடத்தொடங்கினார்கள். 

பிடிபட்ட மிளா

இந்த நிலையில், வனச்சரகர் கருப்பையா தலைமையிலான வன அதிகாரிகள், மருத்துவர்களுடன் இணைந்து மிளாவைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். அவர்களின் பிடியில் சிக்காமல் பெருமாள்புரம் பகுதிக்குத் தப்பிச்சென்ற மிளாவை தேடிச்சென்றனர். பிடிபடாமல் மிளா ஒட்டம் பிடித்ததால், மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதனால், துப்பாக்கிமூலம் மயக்கஊசியை மருத்துவர்கள் செலுத்தினார்கள். 

அதனால் மயக்கம் அடைந்த அந்த மிளா, அருகில் உள்ள தனியார் தோட்டத்தில் தஞ்சம் புகுந்தது. பின்னர் அதை சுற்றிவளைத்த வனத்துறையினர், வலை விரித்து அதைப் பிடித்தார்கள். பின்னர், அதை வாகனத்தில் ஏற்றிய வனத்துறையினர், கங்கைகொண்டானில் உள்ள மான் பூங்காவுக்குக் கொண்டுசென்று விட்டனர். ஒன்றரை வயதுடைய அந்த மிளா, இரை தேடியோ அல்லது குடிநீருக்காகவோ முத்தூர் மலைப்பகுதியில் இருந்து ஊருக்குள் வந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்