`தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணிக்கு எந்தக் கட்சியும் முன்வரவில்லை!’ - கே.எஸ்.அழகிரி | KS Azhagiri sworn in as Tamil Nadu Congress Committee chairman on 8th feb

வெளியிடப்பட்ட நேரம்: 21:14 (05/02/2019)

கடைசி தொடர்பு:21:14 (05/02/2019)

`தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணிக்கு எந்தக் கட்சியும் முன்வரவில்லை!’ - கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்ட கே.எஸ்.அழகிரி, வெள்ளிக்கிழமை (8.2.19) அன்று புதிய நிர்வாகிகளுடன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் பதவியேற்கிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ். அழகிரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதோடு, ஆறு புதிய செயல் தலைவரையும் நியமித்திருக்கிறார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தி. இவர்கள் அனைவரும் டெல்லி சென்று ராகுல் காந்தியைச் சந்தித்துவிட்டு, தற்போது சென்னை வந்திருக்கிறார்கள்.

 

அழகிரி

இந்நிலையில், புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கே.எஸ்.அழகிரி, ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில், ''தமிழகத்தில் நரேந்திர மோடி ஆட்சிக்கு எதிராகக் கடும் கோபத்துடன் மக்கள் கொதித்தெழுந்து, தங்களது எதிர்ப்புகளைப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்திவருகின்றனர். இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில்கூட பா.ஜ.க-வோடு கூட்டணி வைப்பதற்கு எந்த ஒரு கட்சியும் முன்வராத சூழல் தமிழகத்திலே நிலவிவருகிறது. இந்தப் பின்னணியில், மாநிலத்தில் நடைபெற்றுவரும் அராஜக ஊழல் ஆட்சிக்கு முடிவுகட்டவேண்டிய பொறுப்பு, ஜனநாயக சக்திகளுக்கு இருக்கிறது. இதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தி வருகின்றன. இத்தகைய அரசியல் சூழலில், சாதாரண தொண்டரான இருந்த என்னை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் நியமித்த தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

மாணவர் பருவம் முதல் காங்கிரஸ் பேரியக்கத்தில் ஈடுபாடுகொண்டு, ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராக இருமுறையும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் தேர்வுபெற்று, எனது பணிகளைச் சேவை மனப்பான்மையோடு ஆற்றிய மனநிறைவு எனக்கு உண்டு. பின்தங்கிய சமுதாயத்தைச் சார்ந்த எனக்கு, இத்தகைய பதவிகளை வழங்கிய காங்கிரஸ் கட்சிக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருந்துவருகிறேன். 

புதிய தலைவர்கள்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக 8.2.2019 வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்களும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்களுமான சஞ்ஜய் தத், டாக்டர்  ஶ்ரீவல்லபிரசாத் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் முன்னிலையில் பொறுப்பேற்க இருக்கிறேன். என்னோடு செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள  வசந்தகுமார், ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் பொறுப்பேற்க இருக்கிறார்கள். இவ்விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் பெருந்திரளான காங்கிரஸ் செயல்வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இவ்விழாவில், காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென அன்போடு அழைக்கிறேன்'' என அதில் குறிப்பிட்டிருக்கிறார்.