`நல்லது செய்யணும்னு நெனச்சா தேர்தல்ல நிக்காதீங்க!’ - குளித்தலை முன்னாள் சேர்மனுக்கு இளைஞரின் திறந்த மடல் | Youth writes letter to kulithalai former chairman, now online viral

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (05/02/2019)

கடைசி தொடர்பு:23:00 (05/02/2019)

`நல்லது செய்யணும்னு நெனச்சா தேர்தல்ல நிக்காதீங்க!’ - குளித்தலை முன்னாள் சேர்மனுக்கு இளைஞரின் திறந்த மடல்

குளித்தலை நகராட்சி

 "குளித்தலை மக்களுக்கு நீங்க நல்லது செய்யணும்னு நினைச்சா, தயவுசெய்து இனிமே நீங்க தேர்தல்ல நிக்காதீங்க" என்று நகராட்சி முன்னாள் நகர்மன்றத் தலைவருக்கு கம்னியூஸ்ட் இளைஞர் ஒருவர் 'மனம் திறந்த மடல்' என்ற பெயரில் எழுதியுள்ள கடிதம், சமூக வலைதளங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நகராட்சித்தலைவராக இருந்தபோது பல்லவிராஜாவிடம் கோரிக்கை வைக்கும் இளைஞர்கள்

கரூர் மாவட்டம் குளித்தலை, 1994-ம் ஆண்டுக்கு முன்னர் வரை பேரூராட்சியாக இருந்தது. கடந்த 1994-ல் நகராட்சியானது. குளித்தலை நகராட்சியான பிறகு, கடந்த 1996-ல் நடைபெற்ற நகர்மன்றத் தேர்தலில் ம.தி.மு.க-வைச் சேர்ந்த ராணி மணிசேகரும், 2001-ல் ம.தி.மு.க-வைச் சேர்ந்த சகுந்தலா பல்லவிராஜாவும், 2006-ல் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க-வைச் சேர்ந்த அமுதவேலும் தலைவர்களாக இருந்தனர்.

இதில்,1996 மற்றும் 2001-ல் நகர்மன்றத் தலைவர் மக்களால் நேரடியாக வாக்களிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். 2006-ல் வார்டு உறுப்பினர்கள் தலைவரைத் தேர்வுசெய்தனர். குளித்தலை நகராட்சியான பிறகு நடைபெற்ற தேர்தலில், போட்டியிட்டு வெற்றிபெற்ற ம.தி.மு.க நகரச் செயலரளராக இருந்த பல்லவி ராஜா, முதல் மூன்று முறை நகர்மன்றத் துணைத் தலைவராகப் பதவி வகித்துவந்தவர்.

கடைசியாக நடைபெற்ற தேர்தலில், இவர் நேரடியாக நகர்மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். குளித்தலையில் அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு பிராதன கட்சிகளுக்கு குளித்தலை நகரப் பகுதியில் பெருமளவு வாக்குகள் இருந்தபோதும், இவர் நகர்மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு, 2001-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில், இவரது மனைவி சகுந்தலா தான் நகராட்சித் தலைவர். இப்போது, பல்லவி ராஜா தி.மு.க-வுக்கு தாவிவிட்டார். இந்நிலையில்தான், அவருக்கு 'மனம் திறந்த மடல்' என்ற பெயரில் அதிரடிக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார், விவசாயத் தொழிலாளர் சங்க கரூர் மாவட்டச் செயலாளர் முத்துச்செல்வன். அந்தக் கடிதம், சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

முத்துச்செல்வன்அந்தக் கடிதத்தில், `குளித்தலை முன்னாள் நகர் மன்றத் தலைவர் பல்லவி ராஜா அவர்களுக்கு, மனம் திறந்த மடல். தாங்கள், சுமார் 20 ஆண்டுகள் தலைவர், துணைத் தலைவராக குளித்தலை நகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். இந்த மக்களுக்கு என்ன செய்தீர்கள்? உங்களால் குளித்தலை நகருக்கு நிரந்தரப் பேருந்து நிலையம் கொண்டுவர முடியவில்லை. குளித்தலையில் பேருந்து நிலையம் இல்லாதது வேதனையாக இருக்கிறதா, இல்லையா உங்களுக்கு? மறுபடியும் நீங்க குளித்தலை நகராட்சித் தலைவர் ஆனால் என்ன ஆகும் குளித்தலை. காரணம் என்ன? நீங்கள் தலைவராக இருக்கும்போது விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றிய குளித்தலை நகராட்சியில் பேருந்து நிலையம் அமைக்க இடம் இல்லயா?

நீங்கள் தலைவராக இருக்கும்போது மூடப்பட்ட உழவர் சந்தை பாதை, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர என்ன செய்தீர்கள். அருகில் உள்ள நகரங்கள் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நிலையில், குளித்தலை நகரத்தைபல்லவிராஜா (குளித்தலை முன்னாள் சேர்மன்) நரகமாக மாற்றியது ஏன்? சட்டமன்றத்தின் பொன்விழா நாயகன் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் போட்டியிட்ட முதல் தொகுதி, தமிழகத்தின் முன் மாதிரி வளர்ச்சியடைந்த தொகுதியாக மாற வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் கனவு உங்களுக்கு இருக்கிறதா? அந்த ஆசையில் குளித்தலை நகரத்தை நரகம் ஆகியது போல் குளித்தலை தொகுதியை நரகமாக மாற்றிவிடாதீர்கள். குளித்தலை மக்களுக்கு நல்லது செய்யணும்னு நினைச்சா, தயவுசெய்து நீங்க தேர்தலில் நிற்காதீர்கள். வேதனையுடன் குளித்தலை நகராட்சியில் வசிக்கும் மக்களில் நானும் ஒருவன். பதிவு தவறு என்றால் தொடர்புகொள்ளவும்’’ என்று தனது செல்போன் எண்ணுடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி முத்துச்செல்வனிடம் பேசினோம். `அவர் மூன்று முறை குளித்தலை நகராட்சிக்கு துணைத் தலைவராக இருந்திருக்கிறார். ஒருமுறை தலைவராக இருந்திருக்கிறார். அவரது மனைவி ஒருமுறை தலைவராக இருந்திருக்கிறார். ஆனா, எந்த அடிப்படை வசதியையும் செய்யலை. தமிழகத்திலேயே மோசமான நகராட்சியாக குளித்தலை நகராட்சி மாறி இருக்கு. மறுபடியும் தி.மு.க போன அவர், இந்தமுறை குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் நிற்க காய் நகர்த்திவருகிறார். இத்தனை முறை பதவியில் இருந்தும், குளித்தலைக்கு எதையும் செய்யாத அவர் எம்.எல்.ஏ ஆனால், குளித்தலை தொகுதியையும் குட்டிச்சுவராக்கிவிடுவார். அதனால்தான், இந்தக் கடிதத்தை அவருக்கு எழுதினேன். அது சமூக வலைதளங்களில் பரபரப்பாக ஆயிட்டு" என்றார்.

பல்லவி ராஜா தரப்பில் கேட்டோம். ``அண்ணனால் குளித்தலை நகராட்சி அடைந்த வளர்ச்சிகள் ஏராளம். ஆனா, அந்த இளைஞர் யாரோட தூண்டுதலின் பேரில் இப்படி அவதூறுகளைப் பரப்பிவருகிறார்? அதை அண்ணன் ஒரு விஷயமாகவே கண்டுக்கலை. நீங்களும் கண்டுக்க வேண்டாம்’’ என்றதோடு,முடித்துக்கொண்டார்கள்.