`எங்க தாத்தா டி.வி கொடுத்தார்; அப்பா செட் டாப் பாக்ஸ் கொடுப்பார்' - உதயநிதி பேச்சால் ஊராட்சி சபையில் சிரிப்பலை! | My grand father gave tv my dad will give set top boxes says udhyanithi stalin

வெளியிடப்பட்ட நேரம்: 00:02 (06/02/2019)

கடைசி தொடர்பு:07:03 (06/02/2019)

`எங்க தாத்தா டி.வி கொடுத்தார்; அப்பா செட் டாப் பாக்ஸ் கொடுப்பார்' - உதயநிதி பேச்சால் ஊராட்சி சபையில் சிரிப்பலை!

``எங்க தாத்தா டி.வி., கொடுத்தாரு.., எங்க அப்பா ஆட்சிக்கு வந்தா இலவச செட் டாப் பாக்ஸ் கொடுப்பாங்க..” என தி.மு.க., ஊராட்சி சபைக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கூறிய பதிலால் மக்கள் மத்தியில் கைதட்டலும் சிரிப்பலைகளும் எழுந்தன.

உதயநிதி

தமிழகம் முழுவதும் தி.மு.க.,சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 18-ம்  தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டங்களில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு மக்களிடம் கலந்துரையாடல் நடத்தினார். அதேபோல, இன்றும், தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் மற்றும் நாகலாபுரம் ஆகிய இரண்டு ஊராட்சிகளில் காலை, மாலை என ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெற்றது. இதில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இதில் கலந்துகொண்ட பெரும்பாலான பெண்கள் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, சாலைவசதி, தெருவிளக்கு, சமுதாயக்கூடம் ஆகியவற்றை  நிறைவேற்றிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

ஊராட்சி சபை

அதேபோல, இளைஞர்கள் தங்களது கிராமத்தில் செயற்கை ஓடுதளம், அரசுப்பள்ளியில் என்.சி.சி., வகுப்புகள் துவக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். நூறுநாள் வேலைத் திட்டத்தை நீட்டித்து வேலை தர வேண்டும், முதியோர் ஓய்வூதியத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் முதியவர்கள் பேசினர். குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். மொத்தத்தில் டாஸ்மாக் இல்லாத தமிழகமாக மாற்றம் செய்ய வேண்டும் எனப் பெண்கள் வலியுறுத்திப் பேசினர்.

இதில் பேசிய ஒரு பெண், ``கலைஞர் ஆட்சியில் இலவச கலர் டி.வி., கொடுத்தாங்க. கேபிள் தனியார் வசம் இருந்தாலும் குறைவான கட்டணத்துல எல்லா சேனலையும் பார்த்தோம். இப்போ கேபிள் டி.வி., அரசின் கைவசம் வந்தும், கட்டணம் அதிகரிச்சும், நிறைய சேனல்கள் தெரியலை. இப்போ செட் டாப் பாக்ஸ் வச்சாத்தான்  சேனல்கள் தெரியும்ணு சொல்றாங்க.” என்றார். இதற்கு பதிலளித்துப் பேசிய உதயநிதி, ``எங்க தாத்தா டி.வி., கொடுத்தாரு. எங்க அப்பா ஆட்சிக்கு வந்தா இலவச செட் டாப் பாக்ஸ் கொடுப்பாங்க.” என்றார்.

உதயநிதி

உதயநிதியின் இந்தப் பதிலுக்கு மக்கள் மத்தியில் கைதட்டலும், சிரிப்பலைகளும் எழுந்தன. ``உங்களோட எல்லாக் கோரிக்கைகளையும் குறிச்சு வச்சிருக்கேன். தலைவரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன். விரைவில் தலைவர் ஸ்டாலின் பதவியேற்பார். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழும். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.” என இரண்டு கூட்டங்களிலும் இதே பதிலையேச் சொல்லி விட்டுக் கிளம்பினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க