மனிதர்கள் செய்யும் குற்றத்துக்கு யானைக்குத் தண்டனையா? - சின்னத்தம்பிக்கு பெருகும் ஆதரவு | Tirupur peoples started Save chinnathambi movement

வெளியிடப்பட்ட நேரம்: 02:15 (06/02/2019)

கடைசி தொடர்பு:07:14 (06/02/2019)

மனிதர்கள் செய்யும் குற்றத்துக்கு யானைக்குத் தண்டனையா? - சின்னத்தம்பிக்கு பெருகும் ஆதரவு

கோவையைத் தொடர்ந்து திருப்பூரிலும் சின்னத்தம்பி யானைக்கு ஆதரவாகப் பொதுமக்கள் பேனர்கள் வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சின்னத்தம்பி

கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோவை மாவட்டப் பகுதிகளான கணுவாய், தடாகம், மாங்கரை, மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த யானை சின்னத்தம்பி, அப்பகுதியில் உள்ள விளை நிலங்களை சேதப்படுவதாகக் கூறி வனத்துறையினர், அந்த யானையை இடமாற்றம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகே உள்ள டாப்சிலிப் வனப்பகுதியில் கொண்டுபோய் சின்னத்தம்பி யானையை இறக்கி விட்டனர். ஆனாலும் காட்டுப் பகுதிகளில் வசிக்காமல் தன்னுடைய உறவுகளைத் தேடி நடையாய் நடக்கத் துவங்கினான் யானை சின்னத்தம்பி. கோவை மாவட்ட எல்லைப் பகுதியில் துவங்கிய அவரது நடைப்பயணம் திருப்பூர் மாவட்ட எல்லைக்குள் நுழைந்து 100 கிலோ மீட்டார்கள் கடந்த பின்பும்கூட இன்னும் தொடர்கிறது. 

ஒருபக்கம் உடலில் சோர்வு. மறுபக்கம் தன் உறவுகளைத் தொலைத்ததால் உள்ளத்தில் சோர்வு. இந்த இரண்டு பாரங்களையும் சுமந்துகொண்டு சோகமே உருவாகச் சுற்றித்திரிகிறான் சின்னத்தம்பி. அப்போதும்கூட தன்னை காட்டுக்குள் விரட்ட வரும் வனத்துறை ஊழியர்களையோ, அப்பகுதியில் வாழும் பொதுமக்களையோ சற்றும் சீண்டிவிடாமல்தான் சின்னத்தம்பியின் பயணம் நீடிக்கிறது. தன்னை அடக்க அழைத்து வரப்பட்ட மாரியப்பன் மற்றும் கலீம் ஆகிய கும்கிகளுடன்கூட நட்பு பாராட்டி ஒன்றாய் சேர்ந்து விளையாடுகிறான். இதைவிட வேறு என்ன வேண்டும் நம் மக்களுக்கு சின்னத்தம்பியைப் பிடித்துப்போக. டன் கணக்கில் கணம் கொண்ட சின்னதம்பியை மனதால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள். சின்னத்தம்பிக்கு எதிராக ஒரு நடவடிக்கை எனத் தகவல் வந்தாலும்கூட கொந்தளித்து விடுகிறார்கள். இதனால் கடந்த ஒருவார காலமாகவே சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறான் சின்னத்தம்பி.

சின்னத்தம்பி

இந்தநிலையில்தான் சில தினங்களுக்கு முன் சின்னத்தம்பியை கும்கி யானையாக மாற்றப்போகிறார்கள் என்ற ஒரு தகவல் பரவியது. உடனே உதித்தது `சின்னத்தம்பி பாதுகாப்பு குழு'. கோவையில் ஒன்றிணைந்த சமூக ஆர்வலர்கள் சின்னத்தம்பியை காப்பாற்றக்கோரி போராட்டமே நடத்தினார்கள். அவருக்கு ஆதரவாக ஆங்காங்கே ஃப்ளக்ஸ் பேனரும் வைத்தார்கள். இந்த நிலையில் தற்போது திருப்பூர் மாவட்டத்திலும் சின்னத்தம்பி யானைக்கு ஆதரவாக ஃப்ளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ரயில்நிலையம் உட்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் #Savechinnathambi - என்ற ஹேஷ்டேக்குடன் ஃப்ளக்ஸ் பேனர்களை கட்டியிருக்கிறார்கள் சில பொதுமக்கள். 

``மனிதர்கள் செய்யும் குற்றத்துக்குச் சின்னதம்பிக்கு தண்டனையா?" ``காடுகளை அழிக்கும் மனிதர்கள் நாட்டில்..! காடுகளை உருவாக்கும் யானைகள் கூண்டில்..!" என்ற வாசகத்துடன் வைக்கப்பட்டிருக்கின்றன அந்த பேனர்கள்.

மக்களிடையே நாளுக்குநாள் பெருகி வரும் சின்னத்தம்பி ஆதரவு, அவரை அவர் வாழ்ந்த பகுதிக்கே மீண்டும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒற்றை முழக்கமாய் முழங்கி வருகிறது.