`எதிர்பார்க்கிற தொகுதி; பழைய மரியாதை' - பி.ஜே.பி கூட்டணிக்கு கண்டிஷன் போடும் பாரிவேந்தர்! | If we get the expected constituencies alliance with the BJP says parivender

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (06/02/2019)

கடைசி தொடர்பு:07:31 (06/02/2019)

`எதிர்பார்க்கிற தொகுதி; பழைய மரியாதை' - பி.ஜே.பி கூட்டணிக்கு கண்டிஷன் போடும் பாரிவேந்தர்!

தாங்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளைக் கொடுத்தால் பி.ஜே.பி கூட்டணியில் தொடர்வோம் எனக் கூறியுள்ளார் ஐ.ஜே.கே கட்சியின் தலைவர் பாரிவேந்தர்.

பாரிவேந்தர்

இந்திய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு திருச்சி எஸ்.ஆர். எம் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. காலையில் செயற்குழுவும், மாலை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதால் இதில் கலந்துகொள்ள திருச்சி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதிலும் இருந்து அக்கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் ஹோட்டல் முன்பாக திரண்டு வந்திருந்தனர். அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர், பொதுச் செயலாளர் ஜெயசீலன், மாநில இளைஞரணி செயலர் ஏ.கே.டி வரதராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிர்வாகிகள், பாராளுமன்றத் தேர்தலை சந்திப்பது குறித்து விவாதித்தனர். தொடர்ந்து எந்தக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து கருத்து கேட்டார்.

கூட்டம் முடித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், ``தமிழகத்தில் நல்ல கருத்துகள் உடையக் கட்சி வேறு எதுவும் கிடையாது என்பதால் நல்ல கருத்துகள் மெதுவாகதான் மக்களிடம் கொண்டு போய்ச்சேரும். நல்ல கருத்துள்ள கட்சி எங்களின் இந்திய ஜனநாயக கட்சி. வரும் நாடாளுமன்றத் தேர்தலில், எங்களுடன் தோழமையாக செயல்படும் கட்சியுடன் தொடர்வதா இல்லை புதிய கட்சிகளுடன்  இணைந்து தேர்தலை சந்திப்பதா என்பது குறித்து பொதுக்குழுவில் உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது.

எங்கள் வருமானத்திலிருந்து நாங்கள் மக்களுக்குச் சேவை செய்கிறோம். ஆனால், மற்றவர்கள் மக்களின் வரிப்பணத்திலிருந்து கொடுக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் வருமானத்தில் இருந்து கொடுக்கிறார்கள் என்றால் அரசியலில் சம்பாதித்த பனத்தைத்தான் கொடுக்கிறார்கள். நாங்கள் தேர்தலில் பணம் கொடுக்கக்கூடாது என்ற உணர்வுடன் இருக்கிறோம். தேர்தலில் ஓட்டுப் போட வேண்டும் என்கிற விழிப்பு உணர்வு பிரசாரத்தை எங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாண்டுகள் படிப்புக்கான செலவு 45 கோடி ரூபாயை எங்கள் பல்கலைக் கழக நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.

பாரிவேந்தர்

நாங்கள் 8 வருடங்களாக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற உறுப்பினர்களை மெல்ல மெல்லக் கட்சியில் சேர்த்து வருகிறோம். நாங்கள் தற்போது தொடரும் பி.ஜே.பி அங்கம் வகிக்கும் கூட்டணியில் நாங்கள் ஆரம்ப முதலே இருந்து இருக்கிறோம். ஆனால், எங்களுக்குக் கொடுக்க வேண்டிய உரிய மரியாதையை, அங்கீகாரத்தைக் கொடுக்கவில்லை. பி.ஜே.பிக்கு கடந்த காலங்களில் நாங்கள் எவ்வளவோ செய்திருக்கிறோம். மோடி, அமித் ஷாவை எனக்கு நன்கு தெரிந்திருந்தும் தமிழகத் தலைவர்கள் எங்களைப் புறக்கணிக்கிறார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கையுடன், பழைய மரியாதையையும் சேர்த்துக் கொடுத்தால் பா.ஜ.க-வுடன் கூட்டணியைத் தொடர்வது குறித்துப் பரிசீலிப்போம். நாங்கள் எதிர்பார்க்கிற தொகுதி, எதிர்பார்க்கிற எண்ணிக்கை கிடைத்தால் பா.ஜ.க-வுடன் தோழமை தொடரும்” என முடித்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்த முறையும் அந்தத் தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில் பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி அமைந்தால் பெரம்பலூர் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருக்கும் பாரிவேந்தர் ஆரம்பத்தில் இருந்தே பா.ஜ.க-வுடன் இணக்கமாக இருக்கும் தங்களுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும் எனப் பேசினார் என்கிறார்கள் இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க