`மகனையும், தாயையும் இழந்த வேதனையில் தவிக்கிறேன்' - மேடையில் கலங்கிய செல்லூர் ராஜு! | minister sellur raju emotional when speak about his mom and son

வெளியிடப்பட்ட நேரம்: 04:07 (06/02/2019)

கடைசி தொடர்பு:07:44 (06/02/2019)

`மகனையும், தாயையும் இழந்த வேதனையில் தவிக்கிறேன்' - மேடையில் கலங்கிய செல்லூர் ராஜு!

அ.தி.மு.க பிரமுகர் கிரம்மர் சுரேஷின் தாயாரின் இரண்டாமாண்டு நினைவு நாள் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு, மறைந்த தன் தாயாரையும், மகனையும் நினைத்து மேடையில் கண்ணீர் விட்டுப் பேசியது பொதுமக்களையும் கட்சியினரையும் கலங்க வைத்தது. 

கிரம்மர் சுரேஷ்

எம்.ஜி.ஆர். இளைஞரணியின் மாநில இணைச்செயலாளர் கிரம்மர் சுரேஷ், மறைந்த தன் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக நேற்று நடத்தினார். இதில் அமைச்சர் செல்லூர் ராஜு தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். அப்போது பேசிய கிரம்மர் சுரேஷ், ``எனக்கு எல்லாமே என் அம்மா தான். அவரில்லாமல் வாழ்வதே எனக்கு வேதனையாக உள்ளது. மக்களுக்குச் செய்யும் சேவைகள் மூலம் என் வேதனையிலிருந்து விடுபடுகிறேன். நான் அரசியலுக்கு எந்தப் பதவியையும் எதிர்பார்த்தோ, சம்பாதிக்க வேண்டும் என்றோ வரவில்லை. கடவுள் தருகிறார் அதை மக்களுக்கு வழங்குகிறேன். 

செல்லூர் ராஜு

நான் தி.மு.க.வில் அழகிரிக்காக இருந்தேன். என்னை மகன் எனக் கூறியதால் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனுக்காக இருந்தேன். அவர் மறைவுக்குப் பின் அ.தி.மு.கவுக்கு வந்தேன். இங்கே நான் கட்டுகிற கறை வேட்டி என்பது அண்ணன் செல்லூர் ராஜுக்காகத்தான். மறைந்த என் அம்மாவை அவர் மூலம் பார்க்கிறேன். என்னுடைய ஒரே நோக்கம், ஒருவேளை சோற்றுக்கு மதுரையில் யாரும் கையேந்தக் கூடாது. அவர்களைத் தேடித்தேடி உதவ வேண்டும் என்பதுதான்'' என்றார். 
  
நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டுப் பேசிய செல்லூர் ராஜு, ``எதையும் எதிர்பார்க்காமல் எளிய மக்களுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார் சுரேஷ். அவரைப்போன்ற உதவும் குணம் யாருக்கும் வராது. என்னைக் கஷ்டப்பட்டு படிக்க வைத்து இந்த நிலைக்கு வர ஆளாக்கிய என் தாயார் கடந்த வருடம் காலமானார். அந்த வேதனையை என்னால் வெளியே காட்ட முடிவில்லை. கிரம்மர் சுரேஷ் போல தாயை இழந்த வேதனையில் இருக்கிறேன். 

ராஜு

பலருக்கும் உதவிக்கொண்டிருந்த என் மகன் திடீரென்று விபத்தில் இறந்து போனான். அவன் இருந்திருந்தால் இன்னும் பலருக்கும் உதவிகள் செய்திருப்பான். மகன் பேரில் அறக்கட்டளை வைத்து உதவி செய்துகொண்டிருக்கிறோம்" என அழுதுகொண்டே கூறினார். மேலும், ``என் மகன் வடிவத்தில் கிரம்மர் சுரேஷைப் பார்க்கிறேன்'' என்றபோது கிரம்மர் சுரேஷ் நெகிழ்ந்து போனார். செல்லூர் ராஜு கலந்துகொள்ளும் வழக்கமான விழாவாக இல்லாமல் ரொம்பவும் சென்டிமென்டான விழாவாக இது அமைந்தது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க