வாட்ஸ்அப்பில் கோதண்ட ராமர் சிலை குறித்து சர்ச்சை! - கிருஷ்ணகிரியில் 7 பேர் சிக்கினர் | Kodanda Rama statue to take Bengaluru - 7 people arrested in Krishnagiri

வெளியிடப்பட்ட நேரம்: 11:05 (06/02/2019)

கடைசி தொடர்பு:11:05 (06/02/2019)

வாட்ஸ்அப்பில் கோதண்ட ராமர் சிலை குறித்து சர்ச்சை! - கிருஷ்ணகிரியில் 7 பேர் சிக்கினர்

கிருஷ்ணகிரி மாவட்டம், வழியாகப் பெங்களூருவுக்கு கோதண்ட ராமர் பெருமாள் சிலை கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘வாட்ஸ்அப்பில்’ தகவல் பகிர்ந்து கொண்ட 7 பேரை கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோதண்ட ராமர் சிலை

கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் நேற்று (5-ம் தேதி) கிருஷ்ணகிரி அடுத்துள்ள பாலகுறி பாரத கோயில் அருகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்கிருந்த இளைஞர்கள் சிலர் கோதண்ட ராமர் சிலை பெங்களூரு செல்வது குறித்தும், காவிரி தண்ணீர் தமிழகத்துக்குத் தர மறுக்கும் கர்நாடக அரசு பற்றியும் வன்முறை தூண்டும் விதமாக பேசிக் கொண்டிருந்துள்ளனர். போலீஸாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து நழுவ முயன்றனர். இதைப் பார்த்த போலீஸார் சந்தேகத்தின் பேரில் அவர்களைப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், திருவண்ணாமலையில் இருந்து கிருஷ்ணகிரி வழியாகப் பெங்களூரு நோக்கி பிரமாண்ட கோதண்ட ராமர் பெருமாள் சிலையை, காவிரி நீரைத் தமிழகத்துக்கு தர எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடகாவுக்கு கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இருந்ததாகவும், இதற்காகப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டதாகவும் அந்த இளைஞர்கள் தெரிவிக்கவும் அது குறித்த தகவல்களை ‘வாட்ஸ் அப்பில்’ கோதண்ட ராமர் பெருமாள் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறு கருத்துகள் மற்றும் வீடியோக்களை பரப்பியதும் தெரிய வந்தது.

இதையடுத்து, பாலகுறியைச் சேர்ந்த மகேஷ்குமார், மேலுமலை அருகே உள்ள பி.ஜி.துர்க்கம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, சந்தோஷ்குமார், பிரதீப்குமார், கோவிந்தராஜ், கோவிந்தராஜ் மற்றும் மகேந்திரன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் 

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 7 பேர் மீதும் சட்ட விரோதமாகக் கூடுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.