கின்னஸில் இடம்பிடித்த பெண் யானை தாக்‌ஷாயணி 87 வயதில் மரணம்! | 87 years old elephant died in Kerala

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (06/02/2019)

கடைசி தொடர்பு:11:50 (06/02/2019)

கின்னஸில் இடம்பிடித்த பெண் யானை தாக்‌ஷாயணி 87 வயதில் மரணம்!

ஆசியாவில் அதிக வயது கொண்ட பெண் யானை என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த தாக்‌ஷாயணி யானை மரணம் அடைந்தது.

தாக்‌ஷாயணி

திருவிதாங்கூர் ராஜ கொட்டாம் சார்பில் தேவசம்போர்டுக்கு வழங்கப்பட்டது யானை தாக்‌ஷாயணி. 5 வயதில் திருவிதாங்கூர் அரண்மனைக்கு அழைத்துவரப்பட்ட தாக்‌ஷாயணி யானையை மன்னர் குடும்பம் கேரள தேவசம்போர்டுக்கு வழங்கியது. ஆற்றிங்கல் திருவாறாட்டுகடவு கோயிலில் வளர்க்கப்பட்டு வந்த தாக்‌ஷாயணி பின்னர் செங்கள்ளூர் மகாதேவர் கோயிலுக்கு கொண்டுசெல்லப்பட்டது. ஆசியாவில் மிகவும் வயது முதிர்ந்த யானை என அறியப்பட்டது தாக்‌ஷாயணி யானை. 2016-ம் ஆண்டு கேரள தேவசம்போர்டு சார்பில் யானைகளின் பாட்டி என்ற பொருள்படும் விதமாக `கஜராஜ முத்தச்சி' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

தாக்‌ஷாயணி

மேலும், ஆசியாவில் அதிக வயது கொண்ட பெண் யானை என்று கின்னஸ் புத்தகத்தில் தாக்‌ஷாயணி யானை இடம்பிடித்தது. திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு உட்பட்ட கோயில்களில் அதிகமுறை இறைவனை வீதியுலா அழைத்துச் சென்ற யானை என்ற பெருமைபெற்றது இந்த யானை. தாக்‌ஷாயணி யானைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அஞ்சல் துறை சார்பில் தபால் உறை வெளியிடப்பட்டிருந்தது. செங்கள்ளூர் மகாதேவர் கோயிலில் வளர்க்கப்பட்டுவந்த இந்த யானைக்கு 87 வயது ஆகிறது. வயது முதிர்வு காரணமாக உடல் தளர்வுற்று காணப்பட்டது. நேற்று முன்தினம் முதல் உணவு அருந்தாமல் இருந்த தாக்‌ஷாயணி யானை நேற்று மாலை மரணம் அடைந்தது. ஏராளமான மக்கள் திரண்டு யானைக்கு பூமாலை வைத்து வணங்கினர். அதன் பின்னர் ஆசார விதிப்படி தாக்ஷாயணி யானை அடக்கம் செய்யப்பட்டது.