`வழி தெரியாமல் சுற்றியதால் நேர்ந்த கொடூரம்!’ -வடமாநில வாலிபரைக் கொன்ற 3 பேர் கைது | 3 people arrested for murdering a youth

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (06/02/2019)

கடைசி தொடர்பு:13:20 (06/02/2019)

`வழி தெரியாமல் சுற்றியதால் நேர்ந்த கொடூரம்!’ -வடமாநில வாலிபரைக் கொன்ற 3 பேர் கைது

குடியாத்தம் அருகே வழி தெரியாமல் சுற்றித்திரிந்த வடமாநில வாலிபரை அடித்துக் கொன்று, உடலைக் கிணற்றில் வீசிய சம்பவத்தில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடித்து கொலை செய்யப்பட்ட வடமாநில வாலிபர்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கொசவன்புதூர் கிராமத்தில் உள்ள வறண்டக் கிணற்றில், அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்தவரின் பேன்ட் பாக்கெட்டில் ஆதார் கார்டு, பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை இருந்தன. இதன் மூலம் அவர், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கன்ஜன் கர்பாலியா (35) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக, கே.வி.குப்பம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ``கொலை செய்யப்பட்ட நபர், அசாமிலிருந்து மேலும் இரண்டு நபர்களுடன், கடந்த 4-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்காக ரயிலில் வந்துள்ளார். அப்போது, உடன் வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறில் காட்பாடி ரயில் நிலையத்தில் கன்ஜன் கர்பாலியா இறங்கிவிட்டார். எங்கு செல்வது என்று தெரியாமல், காட்பாடியிலிருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் நடந்து சென்றார். நள்ளிரவு ஆனதால், கொசவன்புதூர் பேருந்து நிறுத்தம் அருகிலேயே சுற்றித்திரிந்துள்ளார்.

அப்பகுதியைச் சேர்ந்த சிலர், வடமாநில வாலிபரைக் கண்டதும் ‘கொள்ளையன்’ என்று சந்தேகித்துள்ளனர். மொழிப் பிரச்னையால், யார், எதற்காக இந்த நேரத்தில் அவர் இங்கு சுற்றுகிறார் என்று கேட்டறிய முடியாமல், கொள்ளையன் என்கிற சந்தேகத்திலேயே கிராம மக்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில், அந்த வடமாநில வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். உடலை, அங்குள்ள தண்ணீரில்லாத கிணற்றில் வீசியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக, கிணற்றின் உரிமையாளரான முன்னாள் போக்குவரத்துக் கழக ஊழியர் கலானந்தன் (60), அரசுப் பேருந்து ஓட்டுநர் முரளி (44), விவசாயி விஜயன் (55) ஆகிய 3 பேரை கைது செய்துள்ளதாக’’ போலீஸார் தெரிவித்தனர்.