`பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தால் எப்படியிருக்கும்?’ - எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்த சர்வே | edappadi palanisamy were shocked for survey results

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (06/02/2019)

கடைசி தொடர்பு:13:42 (06/02/2019)

`பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தால் எப்படியிருக்கும்?’ - எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்த சர்வே

` இந்தக் கூட்டணிக்கான வரவேற்பு எப்படி இருக்கும்?' என 2 சர்வேக்களை எடுத்துள்ளது அ.தி.மு.க தலைமை.

`பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தால் எப்படியிருக்கும்?’  - எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்த சர்வே

` அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முடிவாகிவிட்டது' என்ற தகவல் வெளிவரத் தொடங்கியுள்ளது. ` பன்னீர்செல்வம் உட்பட 2 அமைச்சர்கள்தான் இந்தக் கூட்டணியை விரும்புகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு இதில் உடன்பாடில்லை. பா.ஜ.க நெருக்குதல் காரணமாக மௌனம் காக்கிறார்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

அ.தி.மு.க தலைமை அலுவலகம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மாநிலக் கட்சிகள் தயாராகி வருகின்றன. தி.மு.க அணியில் எந்தெந்த கட்சிகள் அங்கம் வகிக்கும் என்பது முடிவாகிவிட்டது. அ.தி.மு.க அணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்ற தகவல் அதிகாரபூர்வமாக இன்னும் வெளிவரவில்லை. `நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் அ.தி.மு.க கூட்டணி அமைக்கும் என்பதைக் கூற முடியாது. கூட்டணி தொடர்பாக நடைபெறும் பேச்சுவார்த்தை பரம ரகசியம். ரகசிய முடிச்சுகள் அவிழ்க்கப்படும்போது கூட்டணி பற்றி நிச்சயம் அறிவிக்கப்படும். தோழமைக் கட்சிகள், தேசியக் கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி அமையும்' என விளக்கம் கொடுத்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 

பன்னீர்செல்வம்

`தேசியக் கட்சி என்றால் பா.ஜ.க-வுடன் பேச்சு நடக்கிறதா?' என்ற கேள்விக்குப் பதில் அளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ` தேசியக் கட்சி என்றால் பா.ஜ.க மட்டும் அல்ல' என்றார். அவரது இந்தக் கருத்து, கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் உள்மோதல்களை வெளிக்காட்டுவதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதைப் பற்றி நம்மிடம் விவரித்த அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், `` அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. இதுதொடர்பாக இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. வரும் 10-ம் தேதி திருப்பூருக்கு வர இருக்கிறார் பிரதமர் மோடி. அதன்பிறகு 19-ம் தேதி கன்னியாகுமரிக்கு வர இருக்கிறார். வரும் 20-ம் தேதிக்குள் இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம். ஆனால், இப்படியொரு அறிவிப்பு வெளியாவதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை" என விவரித்தவர், 

எடப்பாடி பழனிசாமி, மோடி

`` பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைப்பதில் அ.தி.மு.க எம்.பி-க்களுக்கும் சீனியர்கள் நிர்வாகிகளுக்கும் உடன்பாடில்லை. பன்னீர்செல்வமும் கொங்கு மண்டலத்தின் 2 அமைச்சர்களும்தான் இதில் தீவிரம் காட்டுகின்றனர். ` இந்தக் கூட்டணிக்கான வரவேற்பு எப்படி இருக்கும்?' என 2 சர்வேக்களை எடுத்துள்ளது அ.தி.மு.க தலைமை. பொதுமக்கள் மத்தியில் கட்சிக்காரர்கள் மூலமாக இந்த சர்வேயை எடுத்துள்ளனர். முதல் சர்வேயில், ` பா.ஜ.க-வோடு கூட்டணி வைக்கலாமா? அப்படி வைத்தால் மக்கள் ஆதரவு கொடுப்பார்களா?' எனக் கேட்டுள்ளனர். இதற்குப் பதில் அளித்த பொதுமக்கள், ` கூட்டணி வைத்தால் வாக்களிக்க மாட்டோம்' என பெருவாரியாகத் தெரிவித்துள்ளனர். இதன்பிறகு 2-வதாக எடுக்கப்பட்ட சர்வேயில், ` கூட்டணி வைக்காவிட்டால், அ.தி.மு.க-வுக்கான வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கும்?' எனக் கேட்டுள்ளனர். அப்போதும், ` நிச்சயமாக வாக்களிக்க மாட்டோம். அ.தி.மு.க-வை நாங்கள் நம்பவில்லை' எனக் கூறியுள்ளனர். இதற்கான காரணத்தைக் கேட்டபோது, ` பா.ஜ.க-வோடு கூட்டணி போகாவிட்டாலும் தேர்தலுக்குப் பிறகு மோடியைத்தான் அவர்கள் ஆதரிப்பார்கள், எனவே, வாக்களிக்க மாட்டோம்' எனப் பதில் வந்துள்ளது. 

தமிழிசை

கள நிலவரம் இப்படியிருந்தாலும், பா.ஜ.க-வினரின் நெருக்குதல்கள் காரணமாக கூட்டணியில் இணையும் முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி வந்துவிட்டார். ` தேர்தலுக்குப் பிறகு ஸ்டாலின் இருக்கக் கூடிய அணியில் நாங்கள் அங்கம் வகிக்க மாட்டோம். உங்களைத் தான் ஆதரிப்போம். தேர்தலுக்குப் பிறகு உங்களுடன் வருகிறோம்' என தமிழக பா.ஜ.க நிர்வாகிகளிடம் எடுத்துக் கூறினார். அவரது கருத்தை பா.ஜ.க ஏற்கவில்லை. தேர்தலில் 20 முதல் 22 தொகுதிகளில் அ.தி.மு.க போட்டியிடலாம். மற்ற தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கலாம் என முடிவு செய்துள்ளனர்" என்றார் நிதானமாக.