இப்படியொரு முதல்வரை தமிழகம் இதுவரை பார்த்ததில்லை!'- எடப்பாடி பழனிசாமியை வசைபாடும் வைகோ | MDMK supremo slams TN CM EPS

வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (06/02/2019)

கடைசி தொடர்பு:15:35 (06/02/2019)

இப்படியொரு முதல்வரை தமிழகம் இதுவரை பார்த்ததில்லை!'- எடப்பாடி பழனிசாமியை வசைபாடும் வைகோ

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம்சாட்டிய ம.தி.மு.க பொதுச்செயலாளரான வைகோ, தமிழகம் இதுவரை எடப்பாடி பழனிசாமியைப் போன்ற மோசமான முதல்வரைச் சந்தித்ததில்லை எனக் காட்டமாகத் தெரிவித்தார். 

வைகோ பேட்டி

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் ம.தி.மு.க நிர்வாகியின் இல்லத் திருமணவிழாவில் கலந்துகொண்ட வைகோ, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ``ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் நேற்றைய வாதத்தின்போது என்னை நீதிபதி பேசுவதற்கே அனுமதிக்கவில்லை. 

இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞர்களும் சரியான முறையில் கருத்துகளை எடுத்துவைத்து வாதாடவில்லை, 2013-ம் ஆண்டு என் சார்பாகவும் தமிழக அரசின் சார்பிலும் போடப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளன. ஆனால், இந்த விவகாரங்களைத் தமிழக அரசின் வழக்கறிஞரும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞர்களும் எடுத்துக் கூறி வாதாடவில்லை. 

ஸ்டெர்லைட் பிரச்னையைப் பொறுத்தவரையிலும், தமிழக அரசு இரட்டைவேடம் போடுகிறது. `பூனைக்கும் தோழன், பாலுக்கும் காவல்’ என்கிற அளவுக்கு மக்களைத் தமிழக அரசு ஏமாற்றி வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தமிழக அரசு முழு உதவியையும் செய்து வருகிறது. அந்த ஆலையின் கைக்கூலியாகவே தமிழக அரசு செயல்படுகிறது. தமிழக முதல்வர் போல் பொய் பித்தலாட்டம் செய்யும் முதல்வரை இதுவரை தமிழகம் சந்தித்ததில்லை. 

வைகோ

தமிழகத்தின் திட்டங்களை தொடங்கி வைக்கப் பிரதமர் மோடிக்கு எந்த அருகதையும் இல்லை. மதுரையில் அரசின் திட்டங்களைத் தொடங்கி வைத்துவிட்டு அதே இடத்தில் அரசியல் கூட்டத்திலும் கலந்துகொண்டார். இது தவறான நடவடிக்கை. வரும் 10-ம் தேதி திருப்பூரிலும், 19-ம் தேதி கன்னியாகுமரியிலும் பிரதமருக்குக் கறுப்புக்கொடி காட்டுவோம். தமிழகத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் பிரதமருக்கு எதிரான எங்கள் போராட்டம் அறவழியில் தொடரும். 

மத்தியில் ஆளும் பா.ஜ அரசு, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பணத்தைக் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்க முயற்சி செய்கிறது. மீண்டும் பாரதிய ஜனதா கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் மக்கள் விரோத பாசிச ஆட்சியாக அமைந்துவிடும். விரைவில் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க கூட்டணியே வெற்றிபெறும். மத்திய அரசு கொண்டுவரும் அணை பாதுகாப்பு மசோதா காரணமாக தமிழகத்தின் நதிநீர் உரிமைகள் பறிக்கப்படும். இந்த மசோதாவால் தமிழகத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுவிடும்’’ எனத் தெரிவித்தார்.