`விதிகள் இருக்கு, நடைமுறைதான்படுத்தல!'- டாஸ்மாக் வழக்கில் நீதிபதிகள் காட்டம் | Madurai HC bench seeks TN government's reply over tasmac opening time

வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (06/02/2019)

கடைசி தொடர்பு:17:35 (06/02/2019)

`விதிகள் இருக்கு, நடைமுறைதான்படுத்தல!'- டாஸ்மாக் வழக்கில் நீதிபதிகள் காட்டம்

மது விற்பனையை முறைப்படுத்த பல விதிகளும், அரசாணைகளும் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், ``விதிகள் உள்ளன. ஆனால், அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை" என்று காட்டமாகக் கூறினர்.

தமிழகத்தில் அரசுக்கு அதிக அளவில் வருமானம் பெற்றுத்தரும் துறையாக இருப்பது டாஸ்மாக். மது விற்பனையில் கிடைக்கும் பெரிய அளவிலான வருவாய்தான், தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு இலவச திட்டங்களுக்கு ஆதாரமாக இருக்கிறது என்று செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக அரசு நிர்வாகத்தை விமர்சித்து வந்தன. இதனையடுத்தே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, படிப்படியாக டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் மதுவிலக்கு தமிழகத்தில் உறுதியாக அமல்படுத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார்.

அதோடு, முதல்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடியும், விற்பனை நேரத்தைக் குறைத்தும் உத்தரவைப் பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் தொடர்பாகப் பல்வேறு விதிகள் மாற்றப்பட்டுவருகிறது. இந்நிலையில் ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், ``டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

டாஸ்மாக் கடை

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், 24 மணி நேரமும் மது கிடைக்கும்போது, மதுக்கடைகளின் நேரத்தை மாற்றி அமைப்பதால் என்ன பயன் எனக் கேள்வி எழுப்பினர். அரசுத்தரப்பில், மது விற்பனையை முறைப்படுத்த பல விதிகளும், அரசாணைகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், விதிகள் உள்ளன ஆனால், அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம் மதுவே. கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தினால் பெரும்பாலான குற்றங்கள் குறையும். வருவாய்க்காக டாஸ்மாக் கடைகளை மட்டும் நம்பாமல் அரசுக்கு வருவாயை உயர்த்த பல வழிகள் உள்ளன. அவற்றில் அரசு கவனம் செலுத்த வேண்டும். கிராமசபை கூட்டங்களை நடத்தி மதுக்கடைகளை வேண்டாமெனத் தீர்மானம் நிறைவேற்றலாம் எனத் தெரிவித்தனர். இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.