சந்தியா கொலை துப்பு துலங்க கிடைத்த ஒரே தடயம்!- சினிமா இயக்குநர் சிக்கிய பின்னணி  | Police reveals the background details in Chennai woman murder case

வெளியிடப்பட்ட நேரம்: 16:24 (06/02/2019)

கடைசி தொடர்பு:12:07 (07/02/2019)

சந்தியா கொலை துப்பு துலங்க கிடைத்த ஒரே தடயம்!- சினிமா இயக்குநர் சிக்கிய பின்னணி 

கொலை செய்யப்பட்ட சந்தியா

சென்னைப் பெருங்குடி குப்பைக் கிடங்கில் வீசப்பட்ட கை, கால்கள் யாருடையவை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மனைவியைக் கொலை செய்த சினிமா இயக்குநர் சிக்கியது எப்படி என்பதை போலீஸார் விரிவாக நம்மிடம் கூறினர். 

சென்னைப் பெருங்குடி குப்பைக் கிடங்கில் கடந்த 21-ம் தேதி ஒரு பெண்ணின் இரண்டு கால்கள், கண்டெடுக்கப்பட்டன. பள்ளிக்கரணை போலீஸார் விசாரணை நடத்தி அந்தப் பெண், நாகர்கோவிலைச் சேர்ந்த சந்தியா என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். அவரின் கணவர் பாலகிருஷ்ணன்தான் சந்தியாவைக் கொலை செய்து உடல் பாகங்களை துண்டு, துண்டாக வீசியதும் தெரியவந்துள்ளது. 

சந்தியாவைக் கொலை செய்த பாலகிருஷ்ணன் சிக்கியது எப்படி என்று போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``காதலித்து திருமணம் செய்து கொண்ட சந்தியாவும் பாலகிருஷ்ணனும் பிரிந்துவாழ்கின்றனர். சில மாதங்களுக்கு முன் பாலகிருஷ்ணனை சந்தியா சந்தித்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார் சந்தியா. மீண்டும் ஜனவரி 18ல் சந்தியா சென்னை வந்துள்ளார். ஜாபர்கான்பேட்டை வீட்டில் இருவரும் தங்கினர். அன்றைய இரவு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகுதான் சந்தியாவை பாலகிருஷ்ணன் கொலை செய்துள்ளார். 

 கொலை செய்யப்பட்ட சந்தியா

சந்தியாவின் சடலத்தை எப்படி வெளியில் கொண்டு செல்வது என்று தெரியாமல் அவர் தவித்துள்ளார். அப்போதுதான் சினிமாவில் வருவதைப்போல உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டிவிட்டால் எளிதில் அதை அப்புறப்படுத்திவிடலாம் என்ற யோசனை பாலகிருஷ்ணனுக்கு வந்துள்ளது. இதனால் சந்தியாவின் உடலை துண்டு, துண்டாக வெட்டியுள்ளார். அதை 25 கிலோ அரிசிப் பைகளில் அடைத்துள்ளார். ஒரு பையை கே.கே.நகரில் உள்ள குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு வந்துள்ளார். மற்றவற்றை ஈக்காட்டுதாங்கல் பாலத்தின் கீழ் உள்ள அடையாற்றில் வீசியுள்ளார். பிறகு வீட்டைச் சுத்தம் செய்த அவர், சென்னையிலிருந்து தப்பிவிட்டார். 

குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கை, கால்கள் குறித்து விசாரித்தபோது அதுதொடர்பான செய்திகள் வெளியாகின. அதைப்பார்த்து தனிப்படை போலீஸாருக்குச் சிலர் தகவல் தெரிவித்தனர். அதன்அடிப்படையில்தான் சந்தியாவை அடையாளம் காணமுடிந்தது. அதிலும் அவர் கையில் குத்தப்பட்டிருந்த சிவன், பார்வதி படங்களின் டாட் டூதான் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க உறுதுணையாக இருந்தது. 

துண்டிக்கப்பட்ட கால்கள், கை பாகங்கள் சந்தியா என்று தெரிந்தபிறகு அவரின் கணவர் பாலகிருஷ்ணனைப் பிடித்து விசாரித்தோம். முதலில் அவர் எதுவும் தெரியாது என்று கூறினார். அதன்பிறகு ஜாபர்கான்பேட்டையில் உள்ள வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்றோம். அங்கு கிடைத்த தடயங்கள், உடலை துண்டு துண்டாக வெட்ட பயன்படுத்திய மிஷின், கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தோம். ஆதாரங்கள் சிக்கியதால் சந்தியாவைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். சந்தியாவின் மற்ற உடல்பாகங்கள் எங்கு என்று அவரிடம் விசாரித்தோம். அவர் வீசிய அடையாற்றுப்பகுதிக்கு அவரை இன்று காலை அழைத்துச் சென்றோம். அவர் காட்டிய இடத்தில் தேடினோம். அப்போது அழுகிய நிலையில் சந்தியாவில் சில உடல்பாகங்கள் கிடைத்தன. அதைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளோம் 

கொலை செய்யப்பட்ட சந்தியா

சந்தியாவின் டாட்டூ மட்டும் இல்லையென்றால் இந்த வழக்கில் துப்பு துலங்க பெரிதும் சிரமப்பட்டிருப்போம். ஆதார் பதிவு மூலம் அந்தப் பெண்ணைக் கண்டறிய கைரேகை உதவும் என்று நம்பினோம். ஆனால் கைரேகை கைவிரித்த நிலையிலும் சோர்ந்து போகாமல் தனிப்படையினர் இரவு பகல் பாராமல் விசாரித்தனர். ஆந்திரா, கர்நாடகாவுக்குச் சென்று விசாரித்தும்கூட எந்தவித தகவலும் கிடைக்கவில்லை" என்றார். 

பாலகிருஷ்ணன் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் ``சந்தியாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இருவரும் உயிருக்கு உயிராகக் காதலித்தோம். நான் அரசியலில் ஈடுபட்டபிறகுதான் எங்களின் வாழ்க்கை திசைமாறியது. அதன்பிறகு வீட்டில் தினந்தோறும் சண்டை சச்சரவுகள்தான். பிரபல சினிமா இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். அதன்பிறகு நானே சொந்தமாக `காதல் இலவசம்' என்ற படத்தை இயக்கினேன். அடுத்தடுத்து படவாய்ப்புகள் வரவில்லை. சந்தியாவும் நானும் வெவ்வேறு திசையில் பயணிக்கத் தொடங்கினோம். எங்களுக்குள் எந்தவித தொடர்பு இல்லாமல் இருந்தது. சில மாதங்களுக்குப் பிறகு நாங்கள் இருவரும் சந்தித்தோம். அப்போதும் எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் அவரை கொலை செய்துவிட்டேன். உடல் பாகங்களை துண்டு, துண்டாக வெட்டி வீசினால் தப்பிவிடலாம் என்று கருதினேன். அதற்காக சில ஆங்கிலப் படங்களைப் பார்த்தேன். அதன்படி தலை, கைகள், கால்கள் எனத் துண்டு துண்டாக வெட்டி குப்பைத் தொட்டியிலும் அடையாற்றிலும் வீசினேன். ஆனால், சிக்கிக்கொண்டேன்" என்று கூறியுள்ளார். 

 கொலை செய்யப்பட்ட சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணன்

சந்தியாவின் உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் கைப்பற்றிய பிறகு அவரின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் குப்பைக் கிடங்கு அமைந்துள்ள பெருங்குடிப் பகுதி பள்ளிக்கரணை என்பதால் பள்ளிக்கரணை போலீஸார் முதலில் வழக்குப் பதிவு செய்திருந்தனர். தற்போது கொலை நடந்த இடம் ஜாபர்கான்பேட்டை என்பதால் எம்.ஜி.ஆர். நகர் காவல்நிலையத்துக்கு இந்த வழக்கு மாற்றப்படவுள்ளது. இதனால் எம்.ஜி.ஆர்.நகர் போலீஸார் கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். 

பெருங்குடி குப்பைக் கிடங்கில் கிடந்த பெண்ணின் உடல் பாகங்கள் அடையாளம் காணப்பட்டநிலையில் தென்சென்னைக் காவல்துறையினர் இன்று ரொம்பவே பிஸியாகக் காணப்பட்டனர். சந்தியாவின் உடல் பாகங்களை காலை முதல் அவர்கள் ஆற்றில் தேடினர். ஒவ்வொரு பாகங்களாகக் கிடைப்பதால் அதை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவருகின்றனர். மனைவியின் உடலை துண்டு, துண்டாக வெட்டி கூறுபோட்ட சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணன் கடந்த கால வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை அவர் போலீஸிடம் தெரிவித்துள்ளார். கொலை செய்யப்பட்ட தகவலை கேள்விப்பட்ட சந்தியாவின் உறவினர்களும் பாலகிருஷ்ணனின் உறவினர்களும் தூத்துக்குடி, நாகர்கோவிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டுவந்துள்ளனர். 

விசாரணை முடிவில் சந்தியா கொலை வழக்கில் போலீஸார் வெளியிடும் தகவல்கள் பூதாகரமாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.