`உறுதிமொழி மட்டும் போதாது; அரசாணை வெளியிடணும்!' - அமைச்சர் காமராஜிடம் மக்கள் வலியுறுத்தல் | TN government should issue GO over hydro carbon issue, Tiruvarur people urges Minister Kamaraj

வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (06/02/2019)

கடைசி தொடர்பு:18:23 (06/02/2019)

`உறுதிமொழி மட்டும் போதாது; அரசாணை வெளியிடணும்!' - அமைச்சர் காமராஜிடம் மக்கள் வலியுறுத்தல்

ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர் காமராஜ் உறுதிமொழி அளித்தால் மட்டும் போதாது. தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசல் தொடங்கி, நாகப்பட்டினம் மாவட்டம் கரியாப்பட்டினம் வரை 400 சதுர கிலோ மீட்டர் பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு தீவிரம்காட்டி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இப்பகுதி மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரங்களைக் காப்பாற்ற, தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி இல்லை எனத் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பினர் வலியுறுத்துகிறார்கள்.

போராட்டக்காரர்களிடம் பேசும் அமைச்சர் காமராஜ்

இதுகுறித்து நம்மிடம் பேசிய இக்கூட்டமைப்பின் தலைமை ஆலோசகர், மருத்துவர் பாரதிச்செல்வன், ``திருக்கார வாசல் தொடங்கி கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏலம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு, தற்போது வெளியானதைப் பார்த்துதான் இப்பகுதி மக்கள் விழித்துக்கொண்டார்கள். இது, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் எனப் பொதுவான பெயரில் சொல்லப்பட்டாலும்கூட, இதுவும் கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனங்களைப் பயன்படுத்தி, ஷேல் கேஸ் எடுக்கும் திட்டம்தான். ஏல அறிவிப்பில் இப்பகுதிகள் ஷேல் பாறை (sedimentary basin) பகுதி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பாரதிச்செல்வன்

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், தங்களது வாழ்வாதாரங்கள் முற்றிலும் அழிந்துபோகும் என்ற பதைபதைப்போடு இப்பகுதி மக்கள் போராடிவருகிறார்கள். இப்பகுதி மக்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ், இங்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதிக்காது என உறுதிமொழி அளித்தார். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர் உறுதிமொழி வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அதேசமயம், தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்க, இந்த உறுதிமொழி மட்டும் போதாது. தமிழக அமைச்சரவை உடனடியாகக் கூடி, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களுக்குத் தமிழ்நாட்டில் அனுமதி இல்லை எனக் கொள்கை முடிவெடுத்து, அரசாணை வெளியிட வேண்டும்.

அடுத்தகட்டமாக, சட்டம் இயற்ற வேண்டும். தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷனுக்கு, மன்னார்குடி மற்றும் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலக்கரி படுகை மீத்தேன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், அதைத் தடுக்க 2015-ம் ஆண்டு, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் மீத்தேன் எடுக்க அனுமதி இல்லை என அரசாணை வெளியிட்டார். அதைப் பின்பற்றி தற்போதைய தமிழக ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும். குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும்” என வலியுறுத்தினார்.