பள்ளிக் குழந்தைகளுக்கான விழிப்புஉணர்வு மைம்கள்!- கடலோரக் காவல்படையின் புது முயற்சி | coast guard expo in chennai port

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (06/02/2019)

கடைசி தொடர்பு:17:50 (06/02/2019)

பள்ளிக் குழந்தைகளுக்கான விழிப்புஉணர்வு மைம்கள்!- கடலோரக் காவல்படையின் புது முயற்சி

இந்தியக் கடலோரக் காவல்படையின் சார்பாக 43-ம் ஆண்டு கடலோரக் காவல்படை வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகச் சென்னைத் துறைமுகத்தில் இந்தியக் கடலோரக் காவல்படையின் கப்பல்களைப் பார்வையிட இன்று ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களும் கப்பலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆச்சர்யம் விரிந்த கண்களுடன் கப்பலுக்குள் நுழைந்த மாணவர்களுக்குக்.கப்பல் செயல்படும் விதம், கப்பலில் உள்ள பாதுகாப்புக் கருவிகள், அவசரக் காலச் செயல்பாடுகள் போன்றவை குறித்து விளக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக குழந்தைகளுக்கான பாலியல் விழிப்புஉணர்வு, இயற்கைப் பாதுகாப்பு குறித்த மைம்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள் மூலம் நடத்தப்பட்டது. இது குறித்து சில மாணவர்களின் கருத்துகளைக் கேட்டேன்.

                                                                                                  கடலோரக் காவல்படை

பிரவின் - பள்ளி மாணவர் - சென்னை :
``கப்பலை இதுவரை சமூக ஊடகங்களில்தான் பார்த்திருக்கிறேன்.முதல் முறையாக நேரில் பார்க்கும் போது பிரமாண்டமாக இருக்கிறது. கப்பல் செயல்படும் விதம், பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவற்றை நேரில் பார்த்த அனுபவம் கப்பல் பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்தியதோடு, எதிர்காலத்தில் இது போன்ற ஒரு கப்பலில் வேலைக்குச் சேர வேண்டும் என்ற கனவையும் ஏற்படுத்தி உள்ளது" என்கிறார் ஆச்சர்யம் விரிந்த கண்களுடன்.

ஶ்ரீ ஜெய் - பள்ளி மாணவர் - சென்னை :
``கப்பலை நேரில் பார்த்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சினிமாவில் பார்ப்பதை விடப் பலமடங்கு பெரியதாகவும், ஆச்சர்யங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது. கப்பலில் எங்களுக்காக நடித்துக் காட்டப்பட்ட மைம், ஒரு திரைப்படம் பார்த்த அனுபவத்தைத் தந்தது. இந்த வாய்ப்பை அளித்த இந்தியக் கடலோரக் காவல்படைக்கு நன்றி" என்கிறார்.