காவல் நிலைய வாசலில் கல்லூரி மாணவர்கள் டிக்டாக்! - போலீஸ் காட்டிய அதிரடி | college students are arrested for defaming police officers in tik toc

வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (06/02/2019)

கடைசி தொடர்பு:18:05 (06/02/2019)

காவல் நிலைய வாசலில் கல்லூரி மாணவர்கள் டிக்டாக்! - போலீஸ் காட்டிய அதிரடி

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலைய வாசலில், டிக் டாக் செயலியைப் பயன்படுத்திப் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்ட 3 கல்லூரி மாணவர்களை ஆலங்குளம் போலீஸார் கைதுசெய்தனர். 

டிக்டாக் பதிவிட்ட மாணவர்

சமூக வலைதளங்கள் மூலமாகக் காவல் துறையை இழிவுப்படுத்தும் செயலில் ஈடுபடுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், காவல் நிலைய வாசல் மற்றும் வாகனங்கள் அருகில் நின்று படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பின்னணி இசை மற்றும் பாடலுடன் பதிவு செய்யும் வழக்கம் வேகமாகப் பரவிவருகிறது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும், ஆர்வக்கோளாறு காரணமாக இளைஞர்கள் தொடர்ந்து இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். 

அரசு அலுவலகங்கள், பொது இடங்களில், டிக்டாக் செய்து சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என்கிற எச்சரிக்கையையும் மீறி சிலர் பதிவிட்டுவருகின்றனர். அந்த வகையில், நெல்லை மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலையம் முன்பாக, இளைஞர்கள் இருவர் டிக்டாக் பதிவுசெய்து வலைதளத்தில் பதிவிட்டனர். காவல்நிலைய வாசலில் சட்டம்-ஒழுங்கை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட இளைஞர்கள் குறித்து, காவல் துறையினர் விசாரித்துவந்தனர். 

மாணவர்

இந்த நிலையில், தனியார் கல்லூரி மாணவர்களான சீத்தாராமன், பாஸ்கர் ஆகியோர் டிக்டாக் பதிவுசெய்ததும், அதை முருகேசன் என்பவர் படம் பிடித்ததும் விசாரணையில் தெரியவந்தது. மூவரையும் விசாரணைக்காக அழைத்துச்சென்ற காவல் துறையினர், அவர்கள்மீது வழக்குப்பதிவுசெய்து கைதுசெய்தனர். இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் உள்ள மாணவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..