`அறநிலையத் துறையைப் பாதுகாக்க வேண்டும்!’ - கோயில் நிலத்தில் குடியிருப்போர் சங்கம் வலியுறுத்தல் | People urges government to protect Hindu Religious and Charitable Endowments Department

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (06/02/2019)

கடைசி தொடர்பு:18:20 (06/02/2019)

`அறநிலையத் துறையைப் பாதுகாக்க வேண்டும்!’ - கோயில் நிலத்தில் குடியிருப்போர் சங்கம் வலியுறுத்தல்

மிழ்நாடு அனைத்து சமய நிலங்களில் குடியிருப்போர், அறநிலையத் துறையைப் பாதுகாக்க வலியுறுத்தியும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டியும் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கோயில், மடம், அறக்கட்டளை, வக்ஃபோர்டு, கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்ட மத நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, கடந்த 5-ம் தேதி தொடர்முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அறநிலையத்துறை


இதுகுறித்து, இந்த இயக்கத்தின் மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் கூறுகையில், ''இந்து சமய அறநிலையத் துறை சட்டப்பிரிவு 34-ன்படி, பல தலைமுறைகளாகக் கோயில் இடங்களில் குடியிருப்போருக்கும், சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் அந்த இடங்களுக்கான நியாயமான விலையைத் தீர்மானித்து, பயனாளிகளிடமிருந்து கிரயத் தொகையை தவணை முறையில் பெற்றுக்கொண்டு, இடங்களை சொந்தமாக்கிட வேண்டும். மேலும், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் வாடகைக்கு இருப்போரிடம் வாடகை மற்றும் குத்தகையை பல மடங்கு உயர்த்தியதை ரத்துசெய்ய வேண்டும். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு, அரசே கிரயம் கொடுத்து பயனாளிகளுக்குச் சொந்தமாக்கிட வேண்டும்.

போராட்டம்

 

ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்லி வாடகையாளர்களை வெளியேற்றுவதைக் கைவிட வேண்டும். வக்புஃபோர்டு, தேவாலய இடங்கள், மடங்கள், அறக்கட்டளைக்குச் சொந்தமான இடங்களில் குடியிருப்போருக்கு, அந்த இடங்களைச் சொந்தமாக்கிட வேண்டும். இந்து சமய அறநிலையத் துறையை முற்றிலும் சீரழித்து, அதன் கீழ் உள்ள கோயில் மற்றும் சொத்துகளை ஆதிக்க சக்திகளின் கைகளில் ஒப்படைக்க முயற்சிக்கும் மதவெறி அமைப்புகளைத் தனிமைப்படுத்தி, அறநிலையத் துறையைப் பாதுகாப்போம்'' என்றார்.

அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க தவிர, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.