சந்தியா சென்னை வந்தது ஏன்? - போலீஸ் வெளியிட்ட புதிய தகவல்  | Chennai police investigates sandhiya murder case

வெளியிடப்பட்ட நேரம்: 17:39 (06/02/2019)

கடைசி தொடர்பு:17:39 (06/02/2019)

சந்தியா சென்னை வந்தது ஏன்? - போலீஸ் வெளியிட்ட புதிய தகவல் 

சந்தியா

பெருங்குடி குப்பைக்கிடங்கில் கிடந்த கை, கால்கள், தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணின் உடலில் இருந்து வெட்டப்பட்டவை என்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். சந்தியா, சினிமா மோகத்தில் சென்னை வந்த சமயத்தில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  

சென்னை பெருங்குடி குப்பைக்கிடங்கில், கடந்த 21-ம் தேதி, பெண்ணின் இரண்டு கால்கள், ஒரு கை கிடந்தன. இதுகுறித்து விசாரிக்க இணை கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் முத்துசாமி, உதவி கமிஷனர் கெங்கைராஜ் மேற்பார்வையில் பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ், தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு, கண்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், ரவி, தலைமை காவலர்கள் பாஸ்கர், ராஜேஷ், கோபால், கலைச்செல்வன் மற்றும் காவலர் செல்வராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், காணாமல்போன பெண்களின் பட்டியலைச் சேகரித்து விசாரித்தனர். கர்நாடகா, ஆந்திராவுக்கும் சென்று தனிப்படை போலீஸார் விசாரித்தனர்.

சென்னையில் குப்பைகளை ஏற்றிவந்த லாரி டிரைவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அடுத்து, கையில் குத்தப்பட்டிருந்த பச்சை குறித்தும் பச்சைகுத்துபவர்கள், திருநங்கைககள் ஆகியோரிடமும் விசாரணை நடந்தது. சம்பவ இடத்தில் கை, கால்கள் வைத்திருந்த அரிசிப் பை குறித்தும் செங்குன்றம், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, சிவகாசி ஆகிய இடங்களில் விசாரணையை போலீஸார் மேற்கொண்டனர். ஆனால், எந்தவித துப்பும் துலங்கப்படவில்லை. கைரேகை மூலம் பெண்ணின் ஆதார் பதிவை கண்டறியலாம் என போலீஸார் கருதினர். ஆனால், அதிலும் தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து, போலீஸார் குப்பைக் கிடங்கிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கை, கால்கள் ஆகியவற்றின் போட்டோவை துண்டுப் பிரசுரமாக வெளியிட்டனர்.

 சந்தியா கை, கால்கள் குறித்து போலீஸ் வெளியிட்ட நோட்டீஸ்

அதைப் பார்த்த தூத்துக்குடியைச் சேர்ந்த சிலர், தனிப்படை போலீஸாருக்கு கை, கால்கள் குறித்து முக்கியத் தகவல் ஒன்றைத் தெரிவித்தனர். அதன்அடிப்படையில் விசாரித்தபோதுதான், குப்பைக்கிடங்கில் வீசப்பட்ட கை, கால்கள், சந்தியாவின் உடலில் இருந்து துண்டிக்கப்பட்டவை என்ற தகவல் கிடைத்தது. தொடர்ந்து, அவரின்  விவரங்களை போலீஸார் சேகரித்தனர். அப்போது, அவரின் கணவர் பாலகிருஷ்ணன், சினிமா இயக்குநராக உள்ளார். சென்னை ஜாபர்கான்பேட்டையில் குடியிருக்கும் தகவல் கிடைத்தது. மேலும் சந்தியா, சினிமா மோகத்தில் தூத்துக்குடியிலிருந்து சென்னை வந்த தகவலும் தெரியவந்தது. அதன்பிறகு, அவர்  குறித்த தகவல்கள்  உறவினர்களுக்குத் தெரியவில்லை. அதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் எந்தப் புகாரும் கொடுக்கப்படவில்லை. 

இந்த நிலையில்தான் சந்தியாவை அவரின் கணவர் பாலகிருஷ்ணன் கொலைசெய்து குப்பைத்தொட்டியில் வீசியது தெரியவந்தது. இதனால், பாலகிருஷ்ணனை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். 

  சந்தியா

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சினிமா மோகத்தில் தூத்துக்குடியிலிருந்து சென்னை வந்துள்ளார் சந்தியா. கணவரும் மனைவியும் தனித்தனியாக வசித்துவந்துள்ளனர். அப்போது, சந்தியாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த பாலகிருஷ்ணன், அவரைக் கொலைசெய்துள்ளார். மறுநாள், அவரின் உடலைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். பிளாஸ்டிக் மற்றும் அரிசி கோணிப்பைகளில் உடலை வைத்து பார்சல் கட்டியுள்ளார். இரவு நேரத்தில், எம்.ஜி.ஆர்.நகரில் வைக்கப்பட்ட குப்பைத்தொட்டிகளில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். அதன்பிறகு பாலகிருஷ்ணன், சினிமா தயாரிக்கும் பணிகளில் வழக்கம்போல ஈடுபட்டுவந்துள்ளார். சந்தியாவின் உறவினர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், பாலகிருஷ்ணனிடம் சந்தியாகுறித்து விசாரித்தோம். அப்போது, அவர் எங்களிடம் நாடகமாடினார். எங்களின் விசாரணையில்  கொலைசெய்த தகவலை ஒப்புக்கொண்டார். அதன்பிறகு, அவரைக் கைதுசெய்துள்ளோம். சந்தியாவுக்கு 12-ம் வகுப்பு படிக்கும் மகனும், 5-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். பாலகிருஷ்ணன் கொடுத்த தகவலின் அடிப்படையில், சந்தியாவின் மற்ற உடல் பாகங்களைத் தேடிவருகிறோம்" என்றனர். 

பெண்ணின் கை, கால்களை மட்டுமே வைத்து அவரை அடையாளம் கண்ட பள்ளிக்கரணை போலீஸாரை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டியுள்ளார்.