`எல்லோரும் மனு கொடுக்குறாங்க... நாங்களும் கொடுக்குறோம்!'- வதந்தியால் திணறிய தாசில்தார் அலுவலகம் | People gathered in large number in front Aranthangi of over rumor

வெளியிடப்பட்ட நேரம்: 18:42 (06/02/2019)

கடைசி தொடர்பு:18:42 (06/02/2019)

`எல்லோரும் மனு கொடுக்குறாங்க... நாங்களும் கொடுக்குறோம்!'- வதந்தியால் திணறிய தாசில்தார் அலுவலகம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில், கஜா புயல் நிவாரணம், மத்திய அரசின் நிவாரணம் வழங்கப்படுவதாகப் பரப்பப்பட்ட புரளியால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்டு, மனு அளித்து வருகின்றனர்.

தாசில்தார் அலுவலகம்

கடந்த ஆண்டு நவம்பரில், கஜா புயலின் ருத்ர தாண்டவத்தால் புதுக்கோட்டை மாவட்டமே கடும் பாதிப்புக்குள்ளானது. புயலடித்து 80 நாள்கள் ஆகியும், மாவட்டத்தில் ஏராளமான கிராமங்களில் இன்னும் அரசின் நிவாரணப் பொருள்கள் முழுமையாகச் சென்றடையவில்லை. நிவாரணப் பொருள்கள் கிடைக்காததால், மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்கள் சாலைமறியல் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில்தான், தற்போது வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தால், உடனே நிவாரணப் பொருள்கள் கிடைக்கும் என ஒரு சிலர் கிளப்பிவிட்ட புரளியால், அறந்தாங்கி வட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள், கடந்த இரண்டு நாள்களாக வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்து, மனுக்களைக் கொடுத்துவருகின்றனர்.

மனு எழுதும் பொதுமக்கள்

மத்திய, மாநில அரசுகளின் சார்பில், வட்டாட்சியர் அலுவலகத்தில் நிவாரணத்துக்காக, பொதுமக்களிடம் மனு வாங்கும்படி அறிவுறுத்தாத நிலையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் மனுக்களை வாங்க மறுத்தனர். இதனால், கொதிப்படைந்த மக்கள், கொடுக்கும் மனுக்களை வாங்கும்படி கேட்டுக்கொண்டதை அடுத்து, அதிகாரிகள் மனுக்களை வாங்கிவருகின்றனர். கடந்த 2 நாளில் மட்டும் 5 ஆயிரம் மனுக்கள் குவிந்துள்ளன.

குவிந்த மனுக்கள் 

மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் பேசினோம், 'புயல் அடிச்சி, ரெண்டு மாசத்துக்கு மேலாகிருச்சு. ஆனா, நிவாரணம் ஏதும் கிடைக்கல. மெத்த வீட்டுக் காரவங்களுக்கு நிவாரணம் கெடச்சிருக்கு. கூரை வீட்டில் வசிக்கும் எங்களுக்கு நிவாரணம் கிடைக்கல. இப்படி மனு கொடுத்தாலாவது கிடைக்கும் என்றுதான் வந்தோம். பிரதமர் மோடி, 10,000 பணத்தை பேங்க் அக்கவுன்ட்ல ஏத்திவிடுறதா சொன்னாங்க அதுக்காக, ஆதார் கார்டு, குடும்ப அட்டை, போட்டோ, பேங்க் அக்கவுன்ட் எல்லாத்தையும் மனுவோடு இணைச்சுக் கொடுத்திருக்கோம். எல்லாரும் மனு கொடுக்கிறார்கள். அதனால், நாங்களும் மனு கொடுக்கிறோம்" என்றனர்.

வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் பேசியபோது, கடந்த இரண்டு நாள்களாக நிவாரணம் கேட்டு மனுக்களுடன் பொதுமக்கள் வருகின்றனர். இதுபோன்ற எந்த அறிவிப்பும் எங்களுக்கு வரவில்லை. எனவே, யாரும் மனுக்கள் கொடுக்காதீர்கள் என்று கூறிவிட்டோம். ஆனாலும், வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் மட்டுமே மனுக்களை வாங்கி வைத்துள்ளோம்.

  தாசில்தார்  அலுவலகத்தில் மக்கள் மனு

எழுத்தர்கள், ஒரு மனுவுக்கு ரூ.50 முதல் வசூல்செய்து எழுதிக்கொடுக்கின்றனர். அவர்களையும் முடிந்த அளவுக்கு கட்டுப்படுத்தி விட்டோம். ஆனாலும், பலரும் மறைந்திருந்து எழுதிக்கொடுத்துவருகின்றனர். ஒலிபெருக்கியிலும் தெளிவாக அறிவித்துவிட்டோம். ஆனாலும், பொதுமக்கள் யாரும் கேட்பதாக இல்லை. தொடர்ந்து இதுகுறித்த விழிப்புஉணர்வு அறிவிப்புப் பலகை வைக்க உள்ளோம். மேல் அதிகாரிகளிடம் பேசிவிட்டு, மனுக்களை என்ன செய்வதென்று முடிவுசெய்வோம்" என்றனர். யாரோ கிளப்பிவிட்ட புரளியால், பாமர மக்கள் வந்து ஏமாறும் நிலையைப் போக்க, மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்