விருதுநகரில் அரசு பாசிப்பயறு கொள்முதல் நிலையம் தொடக்கம்! | government greengram purchase centre open

வெளியிடப்பட்ட நேரம்: 00:19 (07/02/2019)

கடைசி தொடர்பு:07:06 (07/02/2019)

விருதுநகரில் அரசு பாசிப்பயறு கொள்முதல் நிலையம் தொடக்கம்!

விருதுநகர் மாவட்டத்தில் கிலோ ரூ.69.75 விலை நிர்ணயித்து பாசிப்பயறு கொள்முதல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது தாமதமாக கொண்டு வரப்பட்ட சிறந்த திட்டம். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள் விற்பனை வாரியம் சார்பில் விருதுநகரில் உள்ள ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பாசிப்பயறு கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் இன்று தொடங்கி வைத்தார்

அப்போது அவர் கூறும்போது, விருதுநகர் மாவட்டத்தில் 3641 ஹெக்டேர் பரப்பளவில் இந்த ஆண்டு பாசிப்பயறு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 400 முதல் 460 கிலோ வரை மகசூல் கிடைத்துள்ளது. ஆனால், விவசாயிகள் கிலோ ரூ.48 முதல் ரூ.50 வரையே கடைகளில் விற்பனை செய்துள்ளனர். இதனால் அவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்புக்காக இந்தப் பாசிப்பயறு கொள்முதல் செய்யப்படுகிறது.

கொள்முதல்

விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் 400 மெட்ரிக் டன், அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் 300 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்படும். பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவுக்கு ரூ.69.75 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இன்று ஒரே நாளில் விருதுநகரில் 6 மெட்ரிக் டன் மற்றும் அருப்புக்கோட்டையில் 2 மெட்ரிக் டன் பாசிப்பயறு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

பயிரை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும் விவசாயிகள் தங்கள் அடையாள அட்டை, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.

கொள்முதல்

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க விருதுநகர் மாவட்ட தலைவர் விஜயமுருகன் கூறும்போது, இந்தத் திட்டம் சிறப்பான திட்டம். ஜனவரி மாதத்தின் தொடக்கத்திலேயே பாசிப்பயறு அறுவடை முடிந்துள்ளது. விவசாயிகள் அனைவரும் கிலோ 50 ரூபாய்க்கு பாசிப்பயறு விற்பனை செய்துள்ளனர். ஆனால், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் திட்டத்தால் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில பெரிய விவசாயிகள் அல்லது வியாபாரிகள் தான் லாபம் அடைவார்கள். விவசாயிகளோ கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலையில் உள்ளனர். அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே இந்தத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.