எமதர்மனோடு விழிப்பு உணர்வுப் பிரசாரம் - விபத்தில்லா திருப்பூரை உருவாக்கும் தன்னார்வலர்கள்..! | Traffic awareness program conducted in tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 02:23 (07/02/2019)

கடைசி தொடர்பு:07:13 (07/02/2019)

எமதர்மனோடு விழிப்பு உணர்வுப் பிரசாரம் - விபத்தில்லா திருப்பூரை உருவாக்கும் தன்னார்வலர்கள்..!

திருப்பூரைச் சேர்ந்த சில தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து போக்குவரத்து விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

விழிப்புஉணர்வு

திருப்பூரில் ``நாளைய திருப்பூர் மக்கள் அமைப்பு'' என்ற தன்னார்வ அமைப்பினர், `விபத்தில்லா திருப்பூர்' என்ற திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நேற்று நடைபெற்ற அதன் தொடக்க விழாவில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் மனோகரன் கலந்துகொண்டு திட்டத்தை துவங்கி வைத்தார். இந்த விபத்தில்லா திருப்பூர் திட்டத்தின் மூலம், திருப்பூர் மாநகரின் பல்வேறு போக்குவரத்து சிக்னல்களில் நின்றுகொண்டு, சாலைகளில் விதிகளை மீறி வாகனங்களை ஓட்டிவரும் நபர்களிடம் போக்குவரத்து விதிமுறைகளைப் பற்றி எடுத்துக் கூறுகிறார்கள். அத்துடன் முறையாக அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு பரிசுப் பொருள்களுடன்கூடிய பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி வருகிறார்கள். குறிப்பாக இன்றைய தொடக்க விழா நிகழ்வில்கூட எமதர்மன் வேடம்போட்ட ஒரு நபரை வைத்து போக்குவரத்து சிக்னலில் விழிப்பு உணர்வு துண்டறிக்கை கொடுக்க வைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய விபத்தில்லா திருப்பூர் திட்ட அமைப்பினர், `திருப்பூரில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் வாகன விபத்துகள்தான் இப்படியொரு திட்டத்தை நாங்கள் உருவாக்கக் காரணமாக இருக்கிறது. அனுதினமும் ஏதோவொரு பகுதியில் சாலை விபத்து ஏற்படுவதைக் கண்கூடாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். எனவே, திருப்பூரில் வசிக்கும் தன்னார்வலர்கள் பலரும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளோம். நாங்கள் எல்லோரும் வெவ்வேறு தொழில்கள் செய்து வந்தாலும், திருப்பூரின் சாலை விபத்துகளைக் குறைக்கின்ற பணிகளில் எப்போதும் ஒன்றிணைந்தே செயல்படுவோம்" என்றனர்.