இலங்கைக்குக் கஞ்சா கடத்த முயன்ற முன்னாள் தாசில்தார் கைது..! | Retired Thasilthar arrested for attempting kanja sumakling to Sri Lanka

வெளியிடப்பட்ட நேரம்: 03:32 (07/02/2019)

கடைசி தொடர்பு:07:23 (07/02/2019)

இலங்கைக்குக் கஞ்சா கடத்த முயன்ற முன்னாள் தாசில்தார் கைது..!

இலங்கைக்குக் கடத்துவதற்காக 196 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா கடத்த முயன்ற கார்த்திக்

ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து இலங்கைக்குக் கஞ்சா கடத்திச் செல்வது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இவற்றை வாங்கிச் செல்வதற்கு இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகுகளில் ராமநாதபுரம் கடலோரப் பகுதிகளுக்கு  ஊடுருவி வருவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு உச்சிப்புளி அருகே சந்தேகப்படும் நிலையில் திரிந்த வாலிபர் ஒருவரை க்யூ பிரிவு போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த வாலிபர் கரூர் இலங்கை முகாமில் வசித்து வரும் கார்த்திக் என்பதும், இலங்கைக்குக் கடத்தி செல்வதற்காக 10 கிலோ கஞ்சாவுடன் உச்சிப்புளி பகுதிக்கு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, வாலிபர் கார்த்திகை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சா பார்சல்களை பறிமுதல் செய்தனர்.
 
இதனிடையே இன்று காலை உச்சிப்புளி அரியமான் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்குக் கஞ்சா கடத்தப்பட இருப்பதாக உச்சிப்புளி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்குச் சென்ற போலீஸார் அரியமான் கடற்கரை பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின்போது அங்கிருந்த தென்னந்தோப்பு ஒன்றில் சுமார் 196 கிலோ கஞ்சா பார்சல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். இவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார் இது தொடர்பாக தென்னந்தோப்பு உரிமையாளரும் ஓய்வு பெற்ற வட்டாட்சியருமான ஜெயக்குமார் என்பவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பரமக்குடியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற வட்டாட்சியரான ஜெயக்குமார், அரியமான் கடற்கரைப் பகுதியில் உள்ள தனது தென்னந்தோப்பு வழியாக இலங்கைக்குக் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜெயக்குமாரை போலீஸார் கைது செய்தனர்.