`உங்களுக்கே குறையா?' - கிராம சபை கூட்டத்தில் கலகலத்த உதயநிதி ஸ்டாலின்! | udhayanithi listened the drawbacks of sasikala Dmk grama Sabha meeting

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (07/02/2019)

கடைசி தொடர்பு:07:28 (07/02/2019)

`உங்களுக்கே குறையா?' - கிராம சபை கூட்டத்தில் கலகலத்த உதயநிதி ஸ்டாலின்!

திருவள்ளூர் தெற்கு மாவட்டம், பூந்தமல்லி அடுத்த பானவேடு தோட்டம் ஊராட்சியில் தி.மு.க மாவட்டச் செயலாளர் நாசர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டத்துறைச் செயலாளர் பரந்தாமன், ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார், சந்தோஷ்குமார் உட்பட தி.மு.க பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

உதயநிதி

கிராம சபைக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் தி.மு.க வார்டு செயலாளர் சேகரின் மகன் அன்பு விபத்தில் காயம் அடைந்துள்ளதால் அவரின் மருத்துவச் செலவுக்கு ரூ.10,000 நிதியளித்தார். அதையடுத்து, கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ``தாமதமாக வந்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்த கூட்டத்துக்கு நம்பிக்கையுடன் வந்துள்ளீர்கள். மக்களின் குறைகளை தி.மு.கவிடம் சொன்னால் வேலை நடக்கும் என்று நம்புகிறீர்கள். மிக விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் உட்காருவார். இந்தக் கூட்டம் பேசிவிட்டுச் செல்லக்கூடிய கூட்டம் அல்ல. உங்கள் குறைகளை என்னிடம் சொல்வீர்கள். அதைக் குறிப்பு எடுத்துக்கொண்டு தலைவரிடம் சொல்வேன். தமிழகத்தில் விரைவில் நல்ல மாற்றம் ஏற்படும்" என்று பேசி முடித்தவுடன் கூட்டம் தொடங்கியது.

உதயநிதி

கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் தங்களின் குறைகளை சொல்லத் தொடங்கினார்கள். இதில் முதலில் உதயநிதியிடம் பேசிய பெண் மைக்கை கையில் வாங்கி என்  பெயர் சசிகலா என்று சொன்னவுடன் கூட்டத்தில் பலத்த சிரிப்பலை சத்தம் எழுந்தது. அப்போது குறுக்கிட்ட உதயநிதி ஸ்டாலின், ``சசிகலாவுக்கே குறையா" என்று சிரித்தபடி கேட்டார். இதையடுத்து, பொதுமக்கள் கூறிய குறைகள் ஒவ்வொன்றையும் கேட்டறிந்தார். இதில் பாரிவாக்கம் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும், பாதாளச் சாக்கடை திட்டம், முதியோர் உதவித் தொகை, ரேஷன் கடையில் முறையாகப் பொருள்கள் வழங்கவில்லை என்று பலர் தெரிவித்தனர். 

உதயநிதி

இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ``உள்ளாட்சி அமைப்புகள் இல்லை, தேர்தல் நடத்தாததுதான் இதற்கெல்லாம் காரணம். மோடி தமிழகத்துக்கு வருவதில்லை. தி.மு.க ஆட்சியில் இந்தப் பூந்தமல்லி தொகுதிக்கு கொண்டு வந்துள்ள திட்டங்கள் குறித்துத் தெரிவித்தார். அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சமத்துவபுரம், மேம்பாலம் கட்டப்பட்டது. பூந்தமல்லியில் அரசு பொது மருத்துவமனை, இந்தப் பகுதியில் 200 பேருக்குப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும், 300 பேருக்கு பட்டா வாங்கிக் கொடுக்கப்படும், நீங்கள் எல்லோரும் உதயசூரியனுக்கு வாக்கு அளிக்க வேண்டும். தி.மு.க ஆட்சிக்கு வந்தபின் உங்கள் குறைகள் முழுவதும் தீர்க்கப்படும்" என்று தெரிவித்தார். உதயநிதி வந்த வழியெங்கும் கொடி தோரணங்கள் வானவெடிகள் எனப் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. உதயநிதியுடன் செல்பி எடுக்க இளைஞர்களும் பொதுமக்களும் முண்டியடித்தனர்.