வன ஊழியரைக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை! நீதிமன்றம் அதிரடி | 17 years imprisonment for sex offenders

வெளியிடப்பட்ட நேரம்: 04:31 (07/02/2019)

கடைசி தொடர்பு:07:34 (07/02/2019)

வன ஊழியரைக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை! நீதிமன்றம் அதிரடி

வன ஊழியரைக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி விருத்தாசலம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாவாடை

காட்டுமன்னார்கோவில் விஸ்வநாதன் நகரைச் சேர்ந்தவர் கணேசன் (55). இவர் வன ஊழியராக பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் பாவாடை(54). இவர்கள் இருவரும் நண்பர்கள். பாவாடை கட்டட தொழிலாளி. இவர் கணேசனுக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளார். வீடு கட்டிக் கொடுத்ததற்கு, கணேசன் பாவாடைக்கு பாக்கி பணம் தர வேண்டியுள்ளது. இந்தப் பணத்தை பாவாடை அடிக்கடி கணேசனிடம் கேட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி  ராமாபுரம் வாலிஸ்பேட்டை பகுதியில் இருவரும் மது அருந்திவிட்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பாவாடை கணேசனிடம் தனக்கு தரவேண்டிய பாக்கி பணத்தைத் தருமாறு கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பாவாடை தான் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து  கணேசன் கழுத்தில் குத்தி உள்ளார். இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.

இதுகுறித்து ராமாபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஜான்போஸ்கோ கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, இந்த வழக்கு விருத்தாசலம் மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளவரன் பாவாடைக்கு ஆயுள் தண்டனையும் 1,000 ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் விஜயகுமார் ஆஜரானார்.

இதேபோல் விருத்தாசலம் அருகே உள்ள ஏ.வள்ளியம் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான பத்தாம் வகுப்பு மாணவி. இவரின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சித்தப்பா உறவுமுறை கொண்டவர் சின்னதுரை (34). இவர் மீன் வியாபாரி. கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ம் தேதி அன்று பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதி விட்டு வந்து வீட்டில் தனியாக இருந்த மாணவியைப் பிற்பகலில் அங்கு சென்ற சின்னதுரை முக்கிய விஷயம் பேச வேண்டும் எனக்கூறி தன்னுடன் அழைத்துச் சென்று பச்சையம்மாள் கோயில் பின்புறம் உள்ள  கரும்பு வயலுக்கு அழைத்துச் சென்று மாணவிக்குத் ஜூஸ் கொடுத்துக் குடிக்கச் செய்துள்ளார். 

அதன் பின்னர் தனக்குத் திருமணமாகி குழந்தை இல்லை அதற்காக உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று மாணவிக்கு தொல்லை கொடுத்துள்ளார். மாணவி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், சின்னதுரை பலவந்தமாக அவரை பாலியல் பாலத்காரம் செய்து வெளியே சொன்னால் குடும்ப மானம் போய் விடும் என்று  மிரட்டி அனுப்பியுள்ளார். அதைத் தொடர்ந்து இந்த விஷயத்தை வெளியே கூறிவிடுவதாக மிரட்டியே ஞாயிற்றுக் கிழமைகளில் மாணவியைத் தனியே அழைத்துச் சென்று தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பம் அடைந்தார். அதிர்ச்சி அடைந்த சின்னதுரை கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து சாப்பிடுமாறும் கருக்கலைந்துவிடும் என்றும் கூறினார். 

அதன்படி அந்த மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்த மாணவிக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. பின்னர் கருச்சிதைவும் ஏற்பட்டது. அப்போதுதான் இந்த விவரங்கள் அனைத்தும் அவரின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் கடத்தல், போக்ஸோ சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சின்னதுரையை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் செல்வப்பிரியா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன் மாணவியைக் கடத்திய குற்றத்துக்காக 5 வருடம் சிறைத் தண்டனையும், ரூ 5,000 அபராதமும், போக்ஸோ சட்டத்தின் கீழ் 14 ஆண்டுகள் சிறையும் ரூ.10,000 அபராதம் விதித்து இரண்டையும் ஏக காலத்தில் அனுபவிக்குமாறு தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிவாரண உதவிகள் கிடைப்பதற்கு இலவச சட்ட உதவி மையத்துக்கும் பரிந்துரைத்தார்.