செல்போனை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது? - போக்குவரத்து விதிமீறல் வழக்கில் நீதிபதிகள் கேள்வி | Why not seize cell phone? - Judges rise the question the case of traffic violations

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (07/02/2019)

கடைசி தொடர்பு:07:37 (07/02/2019)

செல்போனை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது? - போக்குவரத்து விதிமீறல் வழக்கில் நீதிபதிகள் கேள்வி

ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அளித்த மனுவில், ``வாகன விபத்துகள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அடிப்படை சாலை விதியை மீறுவதால் விபத்துகள் அதிகரிக்கின்றன. ஆனால், இதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர். என்.ஹெச் சாலையில் லாரி உள்ளிட்டப் பெரிய ரக வாகனங்களைச் சாலையில் நிறுத்தி விதியை மீறி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்து ஏற்படுகிறது. 

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

எனவே, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோருக்கான அபராதத்தை பத்தாயிரத்தில் இருந்து 1 லட்சமாக உயர்த்த வேண்டும், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவோரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் தொடர்பாக ஊடகங்களில் பிரசாரம் செய்ய வேண்டும், இது தொடர்பாக சாலை சந்திப்புகளிலும், மதுபானக் கூடங்களிலும் ஃபிளக்ஸ் போர்டு வைக்க வேண்டும். மூன்றாவது முறையாக விதிமீறலில் ஈடுபடுவோரின் வாகனத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவில் தெரிவித்திருந்தார்.

போக்குவரத்து

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, ``செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் செல்போனை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.