மதுரை அரசு மருத்துவமனை ஐ.சி.யு வார்டில் திடீர் மின்கசிவு! - நோயாளிகள், உறவினர்கள் அலறல் | madurai rajaji hospital issues

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (07/02/2019)

கடைசி தொடர்பு:11:30 (07/02/2019)

மதுரை அரசு மருத்துவமனை ஐ.சி.யு வார்டில் திடீர் மின்கசிவு! - நோயாளிகள், உறவினர்கள் அலறல்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏ.சி கோளாறு காரணமாகப் புகை மண்டலம் ஏற்பட்டது. நோயாளிகள் இடம் மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

மதுரை அரசு மருத்துவமனை

 

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளிகள் அதிக அளவு சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஏற்கெனவே இங்கு அமைத்திருந்த கேன்டீனில் தீ பாதுகாப்புத் தொடர்பாக வசதிகள் இல்லாத சூழல் உள்ளதாகப் புகார்கள் எழுந்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் அதைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாகச் செயல்பட்டனர்.

 

மதுரை அரசு ராசாசி மருத்துவமனை

இந்நிலையில் ராஜாஜி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவு எண் 115 வார்டில் அமைக்கப்பட்டிருந்த ஏ.சி-யில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு திடீரென லேசான மின் கசிவு ஏற்பட்டு புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இதனால் நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் பயந்து அலறினர். அதைத் தொடர்ந்து விரைந்து வந்த மருத்துவமனை ஊழியர்கள் மின் இணைப்பைத் துண்டித்து பெரும் விபத்தை தவிர்த்தனர். எனினும், அந்த வார்டில் இருந்துவந்த நோயாளிகளை வேறு வார்டுகளுக்கு மாற்றி சிகிச்சை அளிக்க மருத்துவமனை டீன் வனிதா உத்தரவிட்டார். ``மின் கோளாறு காரணமாக இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம். அதைச் சரி செய்துவிட்டோம். இதனால் யாருக்கும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை'' எனத் தெரிவித்தனர். விபத்து தொடர்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா எனச் செய்தியாளர்கள் விசாரித்துவருகின்றனர்.