`ஒத்துழைக்கலன்னா, என் ரியாக்‌ஷன் வேற மாதிரி இருக்கும்!'- சூடான அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் | minister Sevur ramachandran Harsh in Booth agents meeting

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (07/02/2019)

கடைசி தொடர்பு:15:40 (07/02/2019)

`ஒத்துழைக்கலன்னா, என் ரியாக்‌ஷன் வேற மாதிரி இருக்கும்!'- சூடான அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

``நான் இந்தப் பதவியில் இருப்பது பிடிக்கவில்லையா அல்லது கட்சிக்குப் பணியாற்ற உங்களுக்கு விருப்பமில்லையா" என்று பூத் ஏஜென்ட் கூட்டத்தில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சூடாக பேசினார்.

நிர்வாகிகளுடன் சேவூர் ராமச்சந்திரன்

`இதற்கு முன் நீங்கள் எப்படி இருந்தீர்களோ எனக்குத் தெரியது. இனிமேல் கட்சிக்கு முழுமையாக உழைக்க வேண்டும். இல்லையென்றால் கட்சிக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று தலைமைக்குப் புகார் அனுப்பி உங்களைக் காலி செய்துவிடுவேன்' என்று பூத் ஏஜென்ட் கூட்டத்தில் கடுகடுத்தார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச்.செயலாளருமான சேவூர் ராமச்சந்திரன்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற அலுவலகத்தில், அ.தி.மு.க கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமையில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பூத் ஏஜென்ட்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டார். அப்போது அவர், ``நான் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளராக பதவியேற்று 2 மாதங்கள் முடியப்போகிறது. இதுவரை கட்சியின் ஊராட்சி கிளைக்கழக நிர்வாகிகள் யாரும் வந்து என்னை சந்திக்கவில்லை. போனில்கூட கூப்பிட்டு வாழ்த்துச் சொல்லவில்லை.

அதிமுகவினருடன் அமைச்சர் ராமச்சந்திரன்

அதேபோன்று பொங்கலின்போதுகூட எனக்கு வாழ்த்துச் சொல்ல வரவில்லை. பொங்கல் பரிசை வாங்க நீங்களும் வரவில்லை, பரிசு கொடுக்க என்னையும் அழைக்கவில்லை. ஏன் இப்படி இருக்கிறீர்கள். காரணம் என்ன. இதற்கு முன் எப்படி இருந்தீர்களோ என்று எனக்குத் தெரியாது. ஆனால் இனி, கட்சிக்கு முழுமையாக ஒத்துழைப்பு தாருங்கள். இல்லை என்றால் என் ரியாக்‌ஷன் வேற மாதிரி இருக்கும். தலைமையிடம் சொல்லி கட்சிப் பொறுப்பில் இருந்து காலி செய்துவிடுவேன்" என்று கடிந்துகொண்டார்.

மேலும் பேசுகையில், ``நான் மாவட்டச் செயலாளர் பதவிக்கு வந்தது உங்க யாருக்கும் பிடிக்கவில்லையா. நாடாளுமன்றத் தேர்தல் வரும் சமயத்தில் மாவட்டச் செயலாளராகிய எனக்கு ஒன்றியச் செயலாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு தரவில்லையென்றால் தேர்தலை எப்படி சந்திக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். இனிமேல் எதுவாக இருந்தாலும் என்னை அழையுங்கள் என்றார் டென்ஷனாக. 

அமைச்சர் டென்ஷனானதைப் பார்த்து அமைதியாக தலையை குனிந்துகொண்டு, `மாவட்டச் செயலாளர்கள் ஆனதும் இப்படி பேசுகிறாரே அமைச்சர். கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்துக்கு கிடைக்க வேண்டிய மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடுங்கிக்கொண்டு, தன் சுயநலத்துக்காக மாவட்டத்தையே பிரித்துவிட்டார் அமைச்சர். தலைமையும் அவருக்கு துணையாக இருக்கிறது. இப்படி இருக்கும்போது நாங்கள் எப்படி வேலை பார்ப்பது" என்று முணுமுணுத்தனர் கட்சி நிர்வாகிகள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க