`சின்னத்தம்பி யானை நடமாட்டம் குறித்து அறிக்கை வேண்டும்' - ஐகோர்ட்டு உத்தரவு! | Madras Hc order to file report about chinna thambi elephant

வெளியிடப்பட்ட நேரம்: 11:49 (07/02/2019)

கடைசி தொடர்பு:12:29 (07/02/2019)

`சின்னத்தம்பி யானை நடமாட்டம் குறித்து அறிக்கை வேண்டும்' - ஐகோர்ட்டு உத்தரவு!

சின்னத்தம்பி யானையின் நடமாட்டம் குறித்து வரும் 11-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட்

தமிழகத்தின் இன்றைய ஹார்ட் டாப்பிக் சின்னத்தம்பி யானைதான். கோவை தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி காட்டுயானையை வனத்துறையினர் கடந்த 25-ம் தேதி மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். பிடிபட்ட யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள வரகளியாறு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். ஆனால், மீண்டும் சின்னத்தம்பி யானை மீண்டும் தான் இருந்த பகுதிக்கே திரும்பியது. இதையடுத்து, அந்த யானையை கும்கியாக மாற்றும் முயற்சிக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க கோவை தடாகம் பகுதியில் உள்ள செங்கற் சூளைகளை மூட நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சின்னதம்பி

 

`கோவை மாவட்ட வனப்பகுதியிலிருந்து யானைகள் ஊருக்குள் நுழைவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் வனத்துறையினரை திணறடிக்கும் சின்னத்தம்பி யானை ஊருக்குள் நுழைய, தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள செங்கற்சூளைகளில் இருந்து வெளியாகும் நச்சுப்புகை தான் காரணம்'' என முரளிதரன் தன் மனுவில் கூறியுள்ளார். மேலும் `யானைகள் வழித்தடத்தில் இந்த செங்கற்சூளைகள் இருப்பதால், யானைகள் ஊருக்குள் நுழைந்து விடுகிறது. சின்னத்தம்பி யானையைப் பிடித்து முகாமில் வைக்க வேண்டும்’ எனவும் கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, சின்னத்தம்பி யானையின் நடமாட்டத்தை 10-ம் தேதி வரை கண்காணித்து வரும் 11-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.