`அ.ம.மு.கவுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா?’ - உச்சநீதிமன்றம் நான்கு வார காலக்கெடு! | SC give time to election commission to decide cooker symbol for ttv

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (07/02/2019)

கடைசி தொடர்பு:13:20 (07/02/2019)

`அ.ம.மு.கவுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா?’ - உச்சநீதிமன்றம் நான்கு வார காலக்கெடு!

இன்னும் நான்கு வார காலத்துக்குள் இரட்டை இலை வழக்கில் முடிவு எட்டப்படவில்லை என்றால், குக்கர் சின்னத்தை அ.ம.மு.க.வுக்கு ஒதுக்குவது குறித்து முடிவெடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்

இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ். தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிர்த்து, சசிகலா சார்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இடைக்கால ஏற்பாடாக, சசிகலா தரப்பு தேர்தலை எதிர்கொள்ள குக்கர் சின்னமும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற பெயரும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. குக்கர் சின்னத்தில் ஆர்.கே.நகரில் போட்டியிட்டு டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ.வாகவும் வெற்றிபெற்றார்.

இந்த நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக குக்கர் சின்னத்தை வழங்கிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தினகரன் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ``பதிவு செய்யாத ஒரு கட்சிக்குப் பொதுப் பட்டியலில் உள்ள குக்கர் சின்னத்தை வழங்குவது சாத்தியமில்லை" என்று தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி 24-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பதிலளித்தது. 

இவ்வழக்கில் இன்று பிப்ரவரி 7-ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு, ``டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை நான்கு வாரத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். காலதாமதம் ஆகும்பட்சத்தில், டி.டி.வி.தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குவது குறித்து இரண்டு வார காலத்துக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளனர்.

குக்கர்

இந்த நான்கு வார இடைவெளிக்குள் தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பாணை வெளியிடும் பட்சத்தில், அறிவிப்பாணை வெளியிட்ட தேதியில் இருந்து ஒரு வாரத்துக்குள் தினகரனுக்கு பொதுச் சின்னம் ஒன்றை ஒதுக்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தினகரனுக்கு பொதுச் சின்னம் ஒன்றை ஒதுக்குமாறு மார்ச் 9, 2018-ல் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தேர்தல் ஆணையம் எந்த மேல்முறையீடும் செய்யவில்லை. மேல்முறையீடு செய்யாத நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தும் கடமை தேர்தல் ஆணையத்துக்கு இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 

நான்கு வாரத்துக்குள் இரட்டை இலை தொடர்பான வழக்கை முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அ.தி.மு.க. தரப்பும் ஆடிப் போயுள்ளது. இரட்டை இலை வழக்கை அ.தி.மு.க தரப்பு தாமதப்படுத்தும் பட்சத்தில், தினகரனுக்கு பொதுச் சின்னம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அது என்ன சின்னம்? என்பதை தேர்தல் ஆணையமே முடிவு செய்யும். அடுத்த ஒரு மாதத்துக்கு தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.