குறைந்த நிதியைக்கூட வசூலிக்க முடியாதா? - கமிட்டிகளை கலைத்த காங்கிரஸ் தலைவர்! | Kerala Congress committee Dissolved

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (07/02/2019)

கடைசி தொடர்பு:14:45 (07/02/2019)

குறைந்த நிதியைக்கூட வசூலிக்க முடியாதா? - கமிட்டிகளை கலைத்த காங்கிரஸ் தலைவர்!

காங்கிரஸ் கட்சித் தலைமை கூறிய நிதியை வசூலித்து வழங்காத மண்டல கமிட்டிகளை கலைத்து அதிரடி காட்டியிருக்கிறார் கேரள காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்.

கேரள  காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன் தயாரிப்பில் கேரள மாநில அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. கூட்டணிகள், சீட் ஒதுக்கீடு பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் மக்களை சந்திக்கும் பிரசாரங்களும் வேகமெடுத்துள்ளன. அதன் ஒருபகுதியாக கேரள காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், `ஜன மஹா யாத்திரா' என்ற பெயரில் மக்களை சந்திக்கும் பிரசார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மண்டலங்களில் இருந்தும் 12,000 ரூபாய் வசூலித்து தலைமைக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் உள்ள 10 மண்டலங்களில் இருந்து எதிர்பார்த்த அளவுக்கு நிதி தலைமைக்கு வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

முல்லப்பள்ளி ராமச்சந்திரன்

இதையடுத்து காசர்கோடு மாவட்டத்தில் மடிக்கை, பனத்தடி, கோடோம்போளூர், தேலம்பாடி, பைவளிகே, எல்மகஜே, சீமேரி மண்டலங்களும், கண்ணூர் மாவட்டத்தில் ராமந்தளி, எரமம் குற்றூர், செங்களாயி என 10 மண்டலங்கள் கலைக்கப்பட்டதாக கேரள காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து கேரள காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறுகையில், ``குறைந்த அளவு தொகைதான் கலெக்‌ஷன் செய்து அனுப்பும்படி கூறியிருந்தோம். அதுகூட அனுப்ப முடியாத அளவுக்கு செயல்படாமல் இருக்கும் கமிட்டிகளைதான் கலைத்திருக்கிறோம்" என்றார்.