`பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!’ - எண்ணிக்கை அதிகரித்ததாக தகவல் | Birds survey started in southern districts

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (07/02/2019)

கடைசி தொடர்பு:19:07 (07/02/2019)

`பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!’ - எண்ணிக்கை அதிகரித்ததாக தகவல்

மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை தீவுகளிலும் மற்றும் தென் மாவட்டங்களில்  உள்ள கடலோர பகுதிகளிலும் வாழும் பறவைகள் குறித்த கணக்கு எடுக்கும் பணி இன்று துவங்கியது.

பறவைகள் கணக்கு எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காட்சி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பறவைகளைக் கணக்கு எடுக்கும் பணி பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய இரு நாள்கள் நடந்து வருகிறது. ஒத்திசைக்கப்பட்ட ஆய்வு என இந்த ஆய்வு அழைக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் துவங்கி தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணைப் பகுதிகளில் உள்ள முயல் தீவு, மனோலி தீவு, அப்பா தீவு, முள்ளி தீவு மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேர்த்தங்கள், சித்திரங்குடி, காஞ்சிரங்குளம், மேலச்செல்வனூர் ஆகிய இடங்களில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் மற்றும் தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள பறவைகளை கணக்கு எடுக்கும் பணி நடந்து வருகிறது.

மும்பை இயற்கை வரலாற்று சங்க துணை இயக்குநர் பாலச்சந்தர், சென்னை மற்றும் கோவையைச் சேர்ந்த பறவைகள் ஆராய்ச்சி நிபுணர்கள் சந்திரசேகர், கிருஷ்ணமணி, பைஜூ, ராம்குமார் ஆகியோர் தலைமையில் கல்லூரி மாணவர்களைக் கொண்ட குழுவினரும்,  விருதுநகர் மண்டல வன பாதுகாவலர் நிகர் ரஞ்சன், வன உயிரின காப்பாளர் அசோக்குமார் ஆகியோர் தலைமையில் வனத்துறை அலுவலர்களும் 3 பிரிவுகளாக இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பறவைகள் கணக்கு எடுப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் ஆர்வலர்கள்

செங்கால் உள்ளான், சாம்பல் உள்ளான், பூநாரை, கரண்டி வாயன், புள்ளி அலகு கூலைக்கடா, அரிவாள் மூக்கன், செந்நாரை, நீர்க்காகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வசித்து வரும் இப்பகுதிகளில், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பா பகுதிகளில் இருந்தும் பல்வேறு பறவைகள் வலசை வந்து செல்கின்றன. குளிர்காலத்தை அனுபவித்து குஞ்சு பொறித்துச் செல்ல வரும் பறவைகளுக்கு மாவட்டத்தில் நிலவும் வறட்சி பெரும் இடையூறாக உள்ளது. இதனால் ஆண்டுக்கு ஆண்டு பறவைகளின் வருகை குறைந்துகொண்டே வருகின்றன.

இந்த நிலையில், மேற்கொள்ளப்பட்டுள்ள பறவைகள் கணக்கெடுப்பு பணியில் வனத்துறை அலுவலர்கள் ராஜ்குமார், சதீஷ், சிக்கந்தர் பாட்ஷா, ரகுவரன், பறவைகள் நல ஆர்வலர்கள் ராமமூர்த்தி, திவ்யாபாரதி, ரவீந்திரன், சுந்தர் உள்ளிட்டோரும் ஈடுபட்டுள்ளனர்.