``வெறுப்புக்குப் பதில் அன்பை பரப்புவோம்!''- ட்ரோலுக்கு ராதிகா மகள் ரேயான் பதில் | ''Yes, we are mixed family'' - Actor Radhika's daughter Reyane responds to trolls

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (07/02/2019)

கடைசி தொடர்பு:17:00 (07/02/2019)

``வெறுப்புக்குப் பதில் அன்பை பரப்புவோம்!''- ட்ரோலுக்கு ராதிகா மகள் ரேயான் பதில்

ருவருடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி கிண்டல் செய்கிற மோசமான கலாசாரம் ஒன்று சமூக வலைதளங்களில் வேக வேகமாக  பரவி வருகிறது. அதிலும் சம்பந்தப்பட்டவர்கள் செலிப்ரெட்டிகள் என்றால், அவர்களுடைய பர்சனல் வாழ்க்கையை கேலி செய்வதற்கு முழு உரிமையும் இருப்பதுபோலவே இந்த சமூகம் நடந்துகொள்கிறது. சில தினங்களுக்கு முன்னால் தன் அம்மா ராதிகா, அப்பா சரத்குமாருடன் தான் மற்றும் தன் மகன் இருக்கும் புகைப்படத்தை பதிந்த மகள் ரேயான், தன் பெற்றோருக்கு திருமண நாள் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். இதை நெட்டிசன்கள், தரக்குறைவாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்கள். இதற்குப் பதிலடியாக ரேயான், தன்னுடைய கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 

ரேயான் குடும்பம்

அதில், ``அவர் என் அப்பா. யெஸ் அவர் என் அப்பாதான். நீங்கள் குறிப்பிடுவதுபோல என் அப்பா ஆசிர்வதிக்கப்பட்டவர்தான். அருமையான மனைவி, நான்கு குழந்தைகள், ஒரு பேரன் என்று அழகான குடும்பத்தைக் கொண்டவர் அவர். 

குடும்பத்துடன் ராதிகா சரத்குமார்

PC: twitter.com

நான் சின்ன வயதாக இருந்தது முதல், வளர்ந்த பின்னும், எனக்குத் திருமணம் நடந்தபோது, ஏன் குழந்தைப் பிறந்தபோதுகூட இந்த மாதிரி ட்ரோல்களை நான் தொடர்ந்து சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன். சிங்கிள் பேரண்டாக கையில் சின்னக் குழந்தையுடன் சினிமா, பிசினஸ் என்று என் அம்மாவின் போராட்டமும் அதன் வெற்றிகளும் சாதாரணமான சம்பவங்கள் கிடையாது. யாருக்கு இன்னொருவருடைய குழந்தையையும் நேசிக்க மனம் வருகிறதோ அதுவே உண்மையான அன்பு. அந்த வகையில் என் அப்பா ரியல் மேன். அப்பா, அம்மாவை திருமணம் செய்துகொண்ட நாள்களில் அவர் கண்களில் 'நான் ஒரு பாரம்' என்ற உணர்வை எப்போதுமே நான் கண்டதில்லை. அதுதான் அன்பு.

ஒரு குடும்பம் உருவாவதற்கு, அதில் இருப்பவர்களுக்கு இடையே ரத்த சம்பந்தம் இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, அதை அப்படியே ஏற்றுக்கொள்வது குடும்பம். நாங்கள் மிக்ஸ்டு குடும்பம் தான். ஆனால், நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம், வலிமையாக இருக்கிறோம். ஒரு நாள் இது உங்களுக்கும் புரியும். வெறுப்புக்குப் பதில் அன்பை பரப்புவோம்'' என்கிற ரேயானின் வார்த்தைகளில் வரிக்கு வரி அத்தனை முதிர்ச்சி.