` மூன்றாவது முயற்சியில் கிடைத்த வெற்றி இது!' - 4-ம் இடம் பிடித்து ஐஎஃப்எஸ் ஆன ஜெய்குமரன் | Ramanathapuram student 4th place in Indian Forest Service exam

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (07/02/2019)

கடைசி தொடர்பு:17:50 (07/02/2019)

` மூன்றாவது முயற்சியில் கிடைத்த வெற்றி இது!' - 4-ம் இடம் பிடித்து ஐஎஃப்எஸ் ஆன ஜெய்குமரன்

` மூன்றாவது முயற்சியில் கிடைத்த வெற்றி இது!' - 4-ம் இடம் பிடித்து ஐஎஃப்எஸ் ஆன ஜெய்குமரன்

 ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், இந்திய வனப்பணிக்கான தேர்வில் தேசிய அளவில் நான்காம் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

ராமநாதபுரம்

தண்ணியில்லாக் காடு, வறட்சியான ஊரு எனக் காலங்காலமாக  அழைக்கப்படும் மாவட்டம் ராமநாதபுரம். வான் மழையாலும் அவ்வப்போது திறந்துவிடப்படும் வைகை நதியாலும் புறக்கணிக்கப்பட்டாலும், எல்லாத் தடைகளையும் தாண்டி, கல்வியில் ஒவ்வொரு முறையும் சாதனை படைத்துக்கொண்டே இருக்கிறது. ஆண்டு இறுதித் தேர்வுகளான 10 மற்றும் +2 பொதுத் தேர்வுகளின் தேர்ச்சி விகிதத்தில் முன்னேறிய பல மாவட்டங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துவருகிறது.

இதற்கு மகுடம் வைத்ததைப்போல மீண்டும் ஒரு சாதனையைத் தனதாக்கிக்கொண்டிருக்கிறது, ராமநாதபுரம் மாவட்டம். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்திய வனப் பணிக்கான தேர்வில், அகில இந்திய அளவில் 4-வது இடம் பிடித்ததன்மூலம் அந்தச் சாதனையைப் பெற்றுத் தந்துள்ளார், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெய்குமரன். இந்திய வனப் பணிக்கான  நான்காம் கட்ட இறுதித் தேர்வில்,  நாடு முழுவதும் இருந்து பங்கேற்ற 89 பேர்களில் 4-வது இடத்தைப்பிடித்து வெற்றிபெற்றதன் மூலம், தனது மாவட்டத்திற்குப் பெருமை தேடித்தந்துள்ளார்.


ராமநாதபுரம் அரண்மனை அருகே உள்ள சந்நிதி தெரு பகுதியில் வசித்துவரும் ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அலுவலரான நாகேந்திரன் - அரசுப் பள்ளி ஆசிரியை முருகேஸ்வரி தம்பதியின் மகன் ஜெய்குமரன். ராமநாதபுரத்தில் உள்ள நேஷனல் அகாடமியில் 10-ம் வகுப்பு வரை பயின்று, பின்னர் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் +2 முடித்துள்ளார். 2012-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்வில் 1163 மதிப்பெண்கள் பெற்ற ஜெய்குமரன், கட் ஆஃப் மார்க்காக 199.5 பெற்றதன் மூலம், அண்ணா பல்கலைக் கழகத்தில் இடம்பிடித்தார். அங்கு இ.சி.இ பட்டம் பயின்று, 2016-ல் முதல் முறையாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, அதில் நேர்முகத் தேர்வு வரை சென்றுவந்துள்ளார். பின்னர், 2 -வது முறை தேர்வு எழுதியும் கைகூடவில்லை. இந்நிலையில், விடா முயற்சியுடன் 3-ம் முறையாகத் தேர்வு எழுதிய ஜெய்குமரன், இந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார்.  

ஜெய்குமரன்

அகில இந்திய அளவில் சாதனைபடைத்த ஜெய்குமரன் நம்மிடம், ''அப்பா மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றினார். இதனால் எனக்கு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்துவந்தது. அண்ணா பல்கலைக் கழகத்தில் ஏற்பட்ட தொடர்புகள், இதற்கான உத்வேகத்தைக் கொடுத்தன. இதைத் தொடர்ந்து, சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர், மறைந்த சங்கர் சாரை சந்தித்து பயிற்சியில் இணைந்தேன். அங்கு, வனம்குறித்து எனக்குப் பாடம் எடுத்த பேராசிரியர் கார்த்திகேயன் மூலம், சிறந்த பயிற்சியைப் பெற்றேன். இதன் மூலம், முதல்கட்ட தேர்வு எழுதிய சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானோரில் ஒருவனாகவும், 2-ம் கட்டத் தேர்வில் தேர்வுசெய்யப்பட்ட 2,000 பேரில் ஒருவனாகவும், 3-ம் கட்டத் தேர்வில் தேர்வுசெய்யப்பட்ட 200 பேரில் ஒருவனாகவும் வந்த நான், இறுதிக்கட்ட தேர்வில் பங்கேற்ற 89 பேரில் 4-வது இடம் பிடித்துள்ளேன். விரைவில், இந்திய ஆட்சிப் பணிக்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்க உள்ளேன்''என்றார் மகிழ்ச்சி ததும்ப.