“ஒரு அமைச்சர் இப்படி பேசலாமா, மன்னிப்பு கேளுங்கள்!”- கொந்தளிக்கும் ஓட்டுநர்கள் நலச்சங்கம் | Taxi Drivers Association Condemned Minister Jayakumar speech

வெளியிடப்பட்ட நேரம்: 18:23 (07/02/2019)

கடைசி தொடர்பு:18:23 (07/02/2019)

“ஒரு அமைச்சர் இப்படி பேசலாமா, மன்னிப்பு கேளுங்கள்!”- கொந்தளிக்கும் ஓட்டுநர்கள் நலச்சங்கம்

அமைச்சர் ஜெயக்குமார்


 ‘என் சாவுக்கு சென்னை போலீஸ்தான் காரணம்’ என்று பேசி வீடியோ பதிவுசெய்து வைத்துவிட்டு,  ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட கார் டிரைவர் ராஜேஷ் மரணம் தொடர்பாக, ஏளனமான கருத்து சொன்னதற்காக,  அமைச்சர் ஜெயக்குமார் ஊடகங்கள் முன்னால் மன்னிப்பு கேட்க வேண்டும்”  என்று அனைத்து இந்திய சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கம் கொந்தளித்துள்ளது. 

சென்னையை அடுத்த ராமாபுரத்தைச் சேர்ந்த கார்  டிரைவர்  ராஜேஷ், கடந்த சில தினங்களுக்கு முன்பு  ரயில் முன்  விழுந்து தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன், அவர் பேசி பதிவுசெய்திருந்த வீடியோவில், “சென்னை போலீஸார்  தன்னை ஆபாசமான வார்த்தைகளில் பேசி அசிங்கப்படுத்தியதாகவும், போலீஸாரால் டிரைவர்கள் தினம் தினம் சித்ரவதை அனுபவிப்பதாகவும் தன்னுடைய ஆதங்கத்தைக் கொட்டியிருந்தார். அதுமட்டுமல்லாது, தன்னுடைய  மரணத்துக்கு சென்னை போலீஸார்தான் காரணம் எனச் சொல்லி அதிர வைத்திருந்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையானதைத் தொடந்து, இதுதொடர்பான விசாரணைக்கு  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ராஜேஷ் தற்கொலை தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தச் சூழலில், இதுகுறித்து  அமைச்சர் ஜெயக்குமாரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி  எழுப்ப,  “மேல் அதிகாரியிடம் புகார் தெரிவித்திருந்தால், கீழ் அதிகாரிமீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம். இப்படி தற்கொலை செய்வதன் மூலம், அவரை நம்பி இருந்த அவரது குடும்பத்திற்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தற்கொலை செய்பவர்களுக்கு ஐ.நா-வில் சிலை வைக்கப்போவதில்லை. 365 நாளும் அவர்களை நினைத்து யாரும் அழுதுகொண்டும் இருக்கப்போவதில்லை. இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் என்பதை உணர வேண்டும்'' என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரின் இந்தக் கருத்துக்கு எதிராகக்  கொந்தளித்துள்ளது, அனைத்து இந்திய சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கம். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மீன்  வளத்துறை  அமைச்சர்  ஜெயக்குமார் அவர்களே... தாங்கள் ஊடகங்கள் வாயிலாக சென்னையைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜேஷின் மரணம்குறித்து நீங்கள் தெரிவித்துள்ள கருத்து, ஒட்டுமொத்த ஓட்டுநர் சமுதாயத்தையும் ஏளனம் செய்வதுபோல உள்ளது. நீங்களே உங்களுடைய  வாகனத்தை ஓட்டுநர் வைத்துதான் பயன்படுத்துவீர்கள். அப்படி இருக்கும்போது, ஒரு ஓட்டுநர் மறைவுக்கு  ஐ.நா சபையில் சிலை வைப்பார்களா, வருடத்தின் 365 நாள்களும் ஒருவரை நினைத்து அழுதுகொண்டே இருப்பார்களா என்றெல்லாம் கேட்டுள்ளீர்கள். நீங்கள் ஒரு மக்கள் பிரதிநிதியாக இருந்துகொண்டு இவ்வாறு பேசியது கண்டனத்துக்குரியது. விலை மதிக்க முடியாத உயிரை ஓட்டுநர்  சமுதாயத்துக்காக அர்ப்பணித்த நண்பர் ராஜேஷின் இறப்பை துச்சமாக நினைத்துப் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது. அமைச்சராக  இருக்கும் தாங்கள் அவ்வாறு பேசியிருக்கக்கூடாது. எனவே, அனைத்து ஓட்டுநர் சமுதாயத்துக்காகவும் ஊடகங்கள் முன்னிலையில் தாங்கள் மன்னிப்பு கேட்க கேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க